×

மனக் குழப்பம் போக்கும் நாமம்

அருட்சக்தி பெருக்கும் ஆன்மிகத் தொடர் 14

ஆதி சக்திக்கு ஆயிரம் நாமங்கள்

லலிதா சஹஸ்ரநாமங்களின் உரை

ரம்யா வாசுதேவன் & கிருஷ்ணா

மனோரூபேஷு கோதண்டா (மனோரூபேஷு கோதண்டாயை நமஹ)

லலிதா சஹஸ்ர நாமத்திலுள்ள ஒவ்வொரு நாமங்களும் அம்பிகையினுடைய தரிசனத்தை காட்டுகின்றது. அந்தப் பரம்பொருள் எப்படியெல்லாம் நாம் காணுகின்ற உலகத்தில் தொழிற்படுகின்றது என்பதை சுட்டிக் காட்டுகின்றது. நாம் நமக்குள் உணரும் விஷயங்களான ராக, துவேஷங்களை எப்படி கையாள வேண்டுமென்று நுட்பமாக சொல்லிச் செல்கின்றது. ஜீவனுக்குள் ஏற்படும் அலைகழிப்புகளை, அகங்காரத்தின் கைவரிசையை எப்படி அம்பிகை அடக்கி தனக்குள் ஒடுக்கிக் கொள்கிறாள் என்றும் பேசுகின்றது.

நாம் உத்யத்பானு சஹஸ்ராப என்பதிலிருந்து இந்த நாமங்களை மீண்டும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும். உத்யத்பானு சஹஸ்ராபா என்கிற நாமத்தில் ஒரு ஜீவனுக்கு ஆத்மதரிசனம் கிடைக்கின்றது. பிறகு, சதுர்பாஹு சமன்விதா எனும் நாமமானது அம்பிகையின் தரிசனம் நம்மால் உணரப்படும். அல்லது குறியீடுகளாகவோ விளக்கப்படுகின்றது. அதாவது நான்கு கைகளோடு கூடியவள் என்று வருகின்றது. இதற்குப் பிறகு ராக ஸ்வரூப பாசாட்யா, குரோதாங்கார ஸோஜ்வலா போன்ற நாமங்கள் மனதினுடைய விருத்தியைப்பற்றி பேசுகின்றது. ஒன்று ராகம், இன்னொன்று துவேஷம்.

அதாவது விருப்பு, வெறுப்பு. சென்ற அத்தியாயங்களை ஆழமாகப் படித்தால் அவை புரியும். ஆத்ம தரிசனம் பெற்ற ஒருவருக்கு மேலே சொன்ன விஷயங்களிரண்டும் அம்பிகையின் கட்டுப்பாட்டில் சென்று விட்டது புரியும். இதற்குப் பிறகு ஒரு ஜீவனானது விருப்பு மற்றும் வெறுப்பை தாண்டிச் சென்று விடுகின்றான். வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் காணும் இருமைகளை கடந்து சென்று விடுகின்றான். இப்போது இந்த இருமைகளுக்கு அல்லது இந்த விருப்பு வெறுப்புகளுக்கு எது காரணம் என்கிற கேள்வி வரும். இவ்வளவு விஷயத்திற்கும் காரணமே அவனது மனமே என்று தெரியவரும். சரி, இப்போது அந்த மனதிற்கு எது காரணம் என்று கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டும்.

கொஞ்சம் பொறுமையாகப் பார்த்தால் பூமியில் தொடங்கி ஆத்மா வரைக்குமான அனைத்து விஷயங்களையும் நம்முடைய சாங்கிய மரபானது தத்துவங்களாக வரையறுத்து வைத்திருக்கின்றது. அப்படிப் பார்த்தால் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருபத்து நான்கு தத்துவங்கள் உள்ளன. சைவ சித்தாந்தம் அதை முப்பத்தாறாக சொல்லியிருக்கின்றது. உபநிஷதம் இன்னும் விரித்து தொன்னூற்று ஆறு தத்துவங்களாக்கி வைத்திருக்கின்றது. ஆனாலும், இந்த இருபத்து நான்கு தத்துவங்கள்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது.

இந்த இருபத்து நான்கு தத்துவங்களில் முதல் ஐந்து பஞ்ச பூதங்கள். இந்த பஞ்ச பூதங்கள் அதி சூட்சுமப்பட்டு பஞ்ச தன்மாத்திரைகளாக உள்ளன. இந்த பஞ்ச தன்மாத்திரைகளே பஞ்ச ஞானேந்திரியங்களாகவும் பஞ்ச கர்மேந்திரியங்களாகவும் உள்ளன. இப்போது இவையே இருபது தத்துவங்களாக இருப்பதை பார்க்கின்றோம். இந்த இருபது தத்துவங்களுக்கு மேலே மனம் என்று தத்துவமும், புத்தி என்று இன்னொரு தத்துவமும், இதற்கடுத்து அகங்காரம் என்றும், சித்தம் என்றொரு தத்துவமாக உள்ளது. இப்போது இவை அனைத்தையும் சேர்த்தால் இருபத்து நான்கு தத்துவமாக இருப்பதை பார்க்கின்றோம்.

இப்போது ஒரு ஜீவனானது வேலை செய்வதற்கு, ஜென்மாவாக மலர்வதற்கு இந்த இருபத்து நான்கு தத்துவங்களும் வேலை செய்யும். இந்த ஜென்மா முழுவதும் நடப்பதற்குக் காரணமும் இந்த இருபத்து நான்கு தத்துவங்கள்தான். இந்த இருபத்து நான்கு தத்துவங்களின் பிரதிபலிப்பானது ஸ்தூல சரீரத்தில் மட்டுமில்லாமல் சூட்சும சரீரத்திலும் இருக்கும். உதாரணமாக, ஸ்தூல சரீரமே பஞ்ச பூதங்களாலும், ஞான, கர்மேந்திரியங்களின் கட்டுப்பாட்டிற்குள்ளும் உள்ளது. ஆனால், இந்த ஸ்தூல சரீரத்திற்குள் இருக்கக் கூடிய சூட்சும சரீரம் வரையிலும் இந்த இருபத்து நான்கு தத்துவங்கள் படர்ந்திருக்கின்றன.

இப்போது இந்த ஸ்தூல சரீரத்தை இந்த ஆத்மா விட்டால் கூட, இந்த ஜீவாத்மாவிற்கு இந்த ஸ்தூல சரீரம் போனால் கூட, சூட்சும சரீரம் அப்படியே இருக்கும். அந்த சூட்சும சரீரத்தின் மூலமாக இன்னொரு ஜென்மா எடுக்கின்றது. அதன் மூலம் தொடர்ந்து கர்மாக்களை தொடர்ச்சியாக உற்பத்தி செய்தபடி இருக்கின்றது. இப்போது மீண்டும் இடையறாத சுழலில் சுழற்சியில் மாட்டிக் கொண்டு விடுகின்றது. இவற்றிற்கு அனைத்துமான காரணமே மனம்தான். இந்த மனம் மீண்டும் மீண்டும் சூட்சுமமாக தன்னை சரீரத்தோடு தொடர்பு படுத்திக்கொண்டு மாயையில்
சிக்கிக் கொள்கின்றது.

இப்போது இந்த ஜீவனுக்கு என்ன செய்வதென்று தெரியாதபோது அம்பிகையானவள் இந்த மனதை எடுத்துக் கொள்கிறாள். இப்படி எடுத்துக் கொள்வதலேயே அவளுக்கு மனோ ரூபேஷு கோதண்டா என்கிற நாமம் உள்ளது. மனம் என்கிற கரும்பு வில்லை ஏந்தியவள் என்கிற பொருளில் இந்த நாமம் அமைந்துள்ளது. நம்மிடம் இந்த மனம் இருக்கும் வரையில் கரும்பாக மனம் இனிக்காது. ஆனால், அதே மனதை அவள் ஏந்தினால் மனம் கரும்பாக மாறுகின்றது. கரும்புச் சாறுபோல அதற்குள் அம்பிகையின் அருள் எனும் கருணைச் சாறு ஊறி ஊறித் தளும்புகின்றது. அதனால், இந்த மனதை எவ்வித சந்தேகமும் இல்லாமல் அம்பிகையின் கையில் அளிக்கின்ற தெளிவு நமக்கு வரவேண்டும்.

என்னுடைய யோசனையினால் நான் பட்ட அவஸ்தைகள் போதும். இனி என்னால் சிந்திக்க முடிவது என்று ஒன்றுமில்லை. இனி நீயே என் சிந்தனையின் வடிவாய் இரு. உன்னிலிருந்து என்னை இயக்கு. என் ஒவ்வொரு எண்ணமும் என்னுடையது அல்ல என்று புரியவை. மெதுவாக என் மனம் என்பதை உன் கரங்களில் வில்லாக ஏந்திக் கொள் என்கிற பிரார்த்தனை ரூபமான ஒரு அற்புத நாமம் இது. இப்போது பாருங்கள். இந்த ஒட்டுமொத்த ராக, துவேஷங்கள், இருமைகளான சுகம் துக்கம், மனதிற்கு காரணமான இருபத்து நான்கு தத்துவங்கள் என அனைத்துமே ஆத்ம வஸ்து என்கிற அம்பிகையிடம் சென்று அமர்ந்து விட்டது.

இப்போது கரும்பு வில்லுக்கு வருவோம். பொதுவாக கரும்பு வில்லை யார் கையில் இருக்கும் தெரியுமா? மன்மதனுடைய கையில்தான் இருக்கும். மன்மதனுடைய வேலை என்ன? பஞ்ச பாணங்கள் என்கிற ஐம்புலன்களையும் கரும்பு வில்லில் வைத்து மனதின் மீது எறிந்து அதை கலக்கமடையச் செய்வது. அல்லது மயக்குவது. மன்மதன் என்கிற பெயரில் மன் என்றால் மனம். மதனம் என்றால் கலக்குதல். மனதைக் கலங்கடிக்கச் செய்வது. இதனாலேயே அவனுக்கு மன்மதன் என்று பெயர் வந்திருக்கின்றது.

இப்போது அம்பிகை என்ன செய்கிறாள் தெரியுமா? அந்த மன்மதனின் கையில் இருக்கின்ற கரும்புவில் என்கிற அந்த மனதைக் கலக்கச் செய்யும் வில்லை தான் வாங்கி வைத்துக் கொள்கிறாள். இப்போது சொல்லுங்கள் இனி அந்த மன்மதன் எப்படி நம் மனதை கலங்கடிக்க முடியும். அந்த மனம்தான் ஆத்ம சொரூபமான அம்பிகையிடம் சென்று அடங்கி விட்டதே. இனி இந்த மன்மதனுக்கு வேலையில்லை. இப்போது மன்மதன் என்ன செய்வான் தெரியுமா… தகாராதி என்கிற சக்தி வழிபாட்டில் வரும் வித்யையை எடுத்து அம்பிகையை உபாசனை செய்யத் தொடங்கி விடுவான்.

அவனுடைய மனதை கலங்கடிக்கச் செய்யும் வேலை பறிபோனவுடன் காதி வித்யை என்கிற ஸ்ரீவித்யையில் வரும் பஞ்சதஸாக்‌ஷரி எனும் முக்கிய பீஜ மந்திரத்தை எடுத்து ஜபம் செய்தபடி அம்பிகையை உபாசனை செய்யத் தொடங்கி விட்டான். (இந்த மந்திரத்தை சக்தி உபாசனையில் இருப்பவர்களிடமிருந்து பெற்றே சொல்ல வேண்டும் என்பது நியதி) இங்கு மன்மதன் பஞ்சதஸாக்‌ஷரி என்கிற மந்திரத்தை சொல்லிக் கொண்டு, தியானத்தில் லயித்து லயித்து ஆத்மாவிலேயே உட்கார்ந்து விட்டான். இதற்கு நேர் அர்த்தம் என்னவெனில், நம்முடைய மனம் அந்த மந்திரத்தைச் சொல்லிச் சொல்லி அம்பிகையிடம் கலந்து விட்டது என்று பொருள்.

இப்படி மனதை அவள் கையில் நாம் அளிக்கவில்லையெனில், மன்மதன் தொடர்ந்து நம் மனதின் மீது அம்புகளை தொடுத்தபடி இருப்பான். மனமும் கலங்கியபடி இருக்கும். இந்த நாமத்தை நாம் பிரார்த்தனா ரூபமாக, அம்பிகையையே இந்த கரும்புவில் என்கிற மனம் என் கையில் இருப்பதை விட நீயே வைத்துக் கொள் என்று வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

நாமம் சொல்லும் கோயில் இந்த நாமத்திற்கும் கரும்பு வில்லை ஏந்தியபடி காட்சியளிக்கும் அன்னை காஞ்சி காமாட்சியைத்தான் சொல்ல வேண்டும். ஈசனின் கோபத்தால் ஒரு முறை மன்மதன் உருவமிழந்து அரூபமாய் அலைய நேரிட்டபோது காமாட்சி தேவியைச் சரணடைந்தான். மன்மதன் அன்னையிடம், “தேவியே! ஈசனுக்கும், பார்வதிதேவிக்கும் திருமணம் முடிக்க நினைத்து தானே ஈசனின் மேல் பாணத்தை ஏவினேன். அதற்குக் கிடைத்த தண்டனையைப் பார்த்தீர்களா! என்று வருத்தமுற, அன்னை காமாக்ஷி மன்மதனுக்கு அருட்பாலித்து அரூபமானவனை பழைய நிலைக்கு மாற்றினாள்.

மன்மதன் கொடுத்த பாணத்தினால், ஈசன் தன் தேவியை தேட ஆரம்பித்து தோற்றுப்போய் மறுபடியும் மன்மதனை நெற்றிக்கண்ணால் எரிக்க முற்பட்டபோது காமாட்சி தேவி காத்தருளினாள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் ஒட்டியாண பீடம் எனும் காமகோடி சக்தி பீடமாகத் திகழ்வது காஞ்சி காமாட்சியம்மன் ஆலயமாகும். காம கோட்டம் என்றால் விரும்பியவற்றையெல்லாம் தருவது என்று பொருள். காமாட்சியை வலம் வந்து வரம் கேட்டால் தட்டாது தருவாள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆலயத்தில் பலிபீடம் அஸ்திரதேவி எனும் தேவியோடு அபூர்வமாக உள்ளது தங்க கோபுரத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருட்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. தேவி காமாட்சி சக்கரமாகவும் விளங்குகின்றாள். அம்பாள் தென்கிழக்கு திசையைநோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாகக் கொண்டும், நான்கு கைகளுடனும் காட்சி தருகிறாள். கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள்.

காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு. கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி உள்ளது பலர் பார்த்திராத ஒன்று. காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும் புஷ்ப பாணமும் இருக்கும்.இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள்.

பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுவதுண்டு. அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி. காம என்றால் அன்பு, கருணை. அட்ச என்றால் கண். எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள்.

(சக்தி சுழலும்)

நாமம் சொல்லும் கோயில்

சாக்த தந்திர சாஸ்திரங்கள் இந்த நாமத்திற்கான கோயிலாக திருவிடை மருதூரைத்தான் சொல்கின்றன. இக்கோயிலில் அருள்பாலிக்கும் ஈசனது பெயர் மகாலிங்கேஸ்வரர் என்பதாகும். இரண்டு மருத மரத்திற்கு நடுவே ஈசன் வெளிப்பட்டதால் இடைமருதூர் என்கிற பெயர் வந்தது. ஆதிசங்கரர் இத்தலத்திற்கு வந்தபோது அத்வைதமே சத்தியம் என்று ஈசனுக்குள்ளிருந்து ஒரு கை வெளிப்பட்டுச் சொன்னது. மாபெரும் பிராகாரத்தை கொண்ட தலம் இது.

அம்பிகைக்கு பிரகத் சுந்தர குஜாம்பிகை என்று பெயர். மேலும், பாஸ்கரராயரால் இங்கு கோயிலுக்குள்ளேயே மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அருகிலேயே கர்நாடகா மாநிலம் கொல்லூரில் அமைந்துள்ளதுபோல் மூகாம்பிகை சந்நதி உள்ளது. மனநோயால் அவதிப்படுவோர் இக்கோயிலில் வந்து வேண்டிக் கொண்டால் அதிசீக்கிரம் அதிலிருந்து விடுபடுவார்கள். இத்தலம் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன.

பிரச்னைகள் தீர்க்கும் லலிதா சகஸ்ரநாம பரிகாரம்

மனம் அடங்காமல் தொடர்ந்து அலைபாய்ந்தபடி இருப்போர் எப்போதும் இந்த நாமத்தை ஜபிக்கலாம். எந்த காரியத்தைச் செய்யும்போதும் அதைச் முழு மூச்சாக செய்ய விடாது, காம எண்ணங்களால் அலைகழிக்கப்படுபவர்கள் இந்த நாமத்தை நிச்சயம் ஜபிக்க வேண்டும். வெள்ளிக்கிழமையன்று 108 முறை இந்த நாமத்தைச் சொல்லி குங்குமத்தால் அர்ச்சித்து வர மனக் குழப்பம் தீர்ந்து வெற்றி கிட்டும்.

The post மனக் குழப்பம் போக்கும் நாமம் appeared first on Dinakaran.

Tags : Grace ,Adi Shakti ,Lalita Sahasranamas ,Ramya Vasudevan ,Dinakaran ,
× RELATED செவியை நிறைத்து இதயத்தில் அமரும் நாமம்!