
சென்னை, ஆக. 24: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னை பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, கூடுதலாக 65,030 மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் நடந்தது.
இந்த கூட்டத்தில் ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய நான்கு மண்டலங்களில் முதற்கட்டமாக 37 தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 5,941 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் எர்ணாவூர், ஆல் இந்தியா ரேடியோ நகர் (மேற்கு) சென்னை தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 62 மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்க விரிவுபடுத்தப்பட்டு, 1.2.2023 முதல் 38 சென்னை தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய மண்டலங்களில் 6 மைய சமையற்கூடங்கள் மூலமாக காலை உணவு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 65,030 மாணவ, மாணவியர் கூடுதலாக பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்திற்கு 35 மைய சமையற்கூடங்களில் காலை உணவு சமைப்பதற்காக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அம்மா உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயலிக்கான சோதனை பதிவேற்றம் 35 மைய சமையற்கூடங்கள் மற்றும் 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையர்கள் எம்.பி.அமித், எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், எம்.சிவகுரு பிரபாகரன், மாநகர நல அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர், கல்வி அலுவலர் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உணவு எடுத்துச்செல்ல தனி வாகனம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கிடவும், இதை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். இந்த உணவு தயாரிப்பதற்கான மைய சமையற்கூடங்களுக்கு தேவையான பாத்திரங்கள், எரிவாயு உருளைகள் மற்றும் உணவு சமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் ஆகியவை கொள்முதல் செய்து தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பள்ளிகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த வாகனங்களில் மட்டுமே உணவு எடுத்துச் சென்று, உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். மேலும், இந்த வாகனங்கள் செல்லும் வழித்தடங்களை திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
The post முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் சென்னை பள்ளிகளில் கூடுதலாக 65,030 மாணவர்கள் பயன்பெறுவர்: முன்னேற்பாடு பணிகளில் மாநகராட்சி தீவிரம் appeared first on Dinakaran.