×

வேனில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது வேலூரில்

வேலூர், ஆக.24: வேலூரில் வேனில் கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை ஏஎஸ்பி, டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதனை சிலர் குறைந்த விலைக்கு பொதுமக்களிடம் இருந்து வாங்கி வெளி மாநிலங்களுக்கு கடத்தி விற்கின்றனர். இதனை வருவாய்த்துறையினர், உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து தடுத்து வருகின்றனர். அதேபோல் அரிசி கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்கின்றனர்.

இந்நிலையில், வேலூர் சங்கரன்பாளையம் வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, எஸ்பி மணிவண்ணனுக்கு, நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் ஏஎஸ்பி பிரசன்னகுமார், டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில், தெற்கு இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் சங்கரன்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்த டிரைவர் கார்த்தி(40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேனில் 37 மூட்டைகளில் இருந்த 3 ஆயிரத்து 850 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வேலூர் சிவில் சப்ளை குடோனில் ஒப்படைத்தனர். மேலும், கார்த்திக்கு ரேஷன் அரிசி கடத்த உதவியாக இருந்தவர்கள் யார், எங்கு கடத்தப்படுகிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேனில் கடத்திய 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது வேலூரில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,ASP ,DSP ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...