×

வாங்கிய கடனை செலுத்தாததால் பெட்ரோல் பங்கை மீட்ட வங்கி

பாலக்கோடு, ஆக. 24: பாலக்கோட்டில் வங்கியில் கடன் பெற்று செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின்படி பெட்ரோல் பங்கை அதிரடியாக வங்கி நிர்வாகம் மீட்டது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளியில் குடியிருந்து வருபவர் செல்வம், இவர் பாப்பாரப்பட்டி கூட்ரோடு அருகே தனக்கு சொந்தமான 46 சென்ட் நிலத்தில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வந்தார். கடந்த 2015 மற்றும் 2019ம் ஆண்டு பாலக்கோடு இந்தியன் வங்கி கிளையில், பெட்ரோல் பங்கை விரிவுபடுத்த பெட்ரோல் பங்க் உள்ள 46 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்றார். கடந்த 2021 வரை அசல் மற்றும் வட்டி சேர்ந்து ₹1 கோடியே 2 லட்சத்து 79ஆயிரம் ஆனது.

ஆனால் செல்வம் கடன் தொகையை கட்டாததால், கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி வங்கி, நிலத்தை பகிரங்க பொது ஏலத்திற்கு உட்படுத்தி, ₹1.62 கோடிக்கு, பாலக்கோட்டை சேர்ந்த தொழிலதிபர் பி.என்.பி.ஸ்ரீதர் என்பவருக்கு விற்பனை செய்தது. மேற்கண்ட சொத்தை வங்கி நில அளவை செய்து, சுவாதினம் கொடுக்க செல்வம் தரப்பினர் ஒத்துழைப்பு வழங்காமல் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதனால் வங்கியானது தர்மபுரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட்டது. நீதிமன்றம் நிலத்தை அளவீடு செய்து, உரியவருக்கு சுவாதீனம் கொடுக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து நேற்று காலை நீதிமன்றம் நியமித்த அட்வகேட் கமிஷனர் மற்றும் வங்கி வழக்கறிஞர் ரமேஷ்குமார் முன்னிலையில், தாசில்தார் ராஜா, வி.ஏ.ஓ.குமரன், சர்வேயர்கள் நிலத்தை அளவீடு செய்ய சென்றனர். அப்போது செல்வம் தரப்பினர் தவறான சர்வே எண் கொண்ட நீதிமன்ற ஆணையை பெற்றுள்ளீர்கள், எனவே நிலத்தை அளவீடு செய்ய அனுமதிக்கமாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடு செய்து, பாலக்கோடு இந்தியன் வங்கி வசம் சுவாதீனம் ஒப்படைக்கப்பட்டது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வாங்கிய கடனை செலுத்தாததால் பெட்ரோல் பங்கை மீட்ட வங்கி appeared first on Dinakaran.

Tags : Palakode ,Balakot ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே...