
மதுரை: அதிமுக மாநாட்டிற்கு கார் மற்றும் வாகனங்களில் வந்தவர்கள் டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாததால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையகத்திற்கு ரூ20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை அருகே வலையங்குளத்தில் கடந்த 20ம் தேதி அதிமுக மாநில மாநாடு நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற கட்சியினருக்காக தயாரிக்கப்பட்ட உணவுகள் டன் கணக்கில் கீழே கொட்டி வீணாக்கப்பட்ட சம்பவம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. தற்போது மாநாட்டிற்கு கார் மற்றும் வாகனங்களில் வந்த அதிமுகவினர் பல்வேறு டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் வந்து சென்றுள்ளதால் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பாஸ்டேக்கில் பணம் இல்லாமலும், கட்டணம் செலுத்தாமலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள டோல்கேட்டுகளில் அதிமுகவினர் பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கட்டணம் ெசலுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் பல டோல்கேட்களில் அதிமுகவினருக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம், தகராறு நடந்துள்ளது. தகராறு ஏற்பட்ட நேரத்தில் அந்த வழியாக சென்ற மாநாட்டுக்கு வந்த வாகனங்களுடன் பிற வாகனங்களும் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளன. ஆக. 19ம் தேதி இரவு முதல் 20ம் தேதி நள்ளிரவு வரை சென்ற அதிமுகவினரின் வாகனங்களால், ஒவ்வொரு டோல்கேட்களிலும் தினசரி சராசரி வருவாயில் 5 சதவீதம் கலெக்சன் குறைந்துள்ளது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாகனங்கள் மாநாட்டிற்கு வந்ததாக கூறும் நிலையில், கட்டணம் செலுத்தாத வாகனங்களால் மட்டும் ஒரே நாளில் ரூ20 கோடி வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே உணவு வீணான விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், அடுத்தபடியாக டோல்கேட் கட்டணம் செலுத்தாதால் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post அதிமுக மாநாட்டிற்கு வந்த வாகனங்களால் சுங்கச்சாவடிகளில் ரூ20 கோடி இழப்பு: பல இடங்களில் வாக்குவாதம் செய்ததாக புகார் appeared first on Dinakaran.