×

ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த இதய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: எம்ஜிஎம் மருத்துவமனை சாதனை; சிகிச்சைக்கு பின் பல்கேரிய குழந்தை நலம்

சென்னை: மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயதே நிரம்பிய குழந்தைக்கு ரத்தப்பிரிவு என்ற தடையை கடந்து, ஏபிஓ-இணக்கமற்ற குழந்தைக்கான உறுப்பு மாற்று சிகிச்சை செய்து எம்ஜிஎம் மருத்துவமனை சாதனை செய்துள்ளது. இதயத்தசை நோயின் காரணமாக கடைநிலை இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்த 1½ வயது குழந்தையை மேல்சிகிச்சைக்காக பல்கேரியா நாட்டிலிருந்து சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இந்த குழந்தை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தபோது 2வது முறையாக இதயத்தம்பம் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, அந்த குழந்தைக்கு மார்பு அழுத்தங்களுடன் 45 நிமிட நேரத்துக்கு சிபிஆர் சிகிச்சை அளித்த பிறகு இதய செயல்பாடு மீண்டும் தொடங்கியது.

குழந்தையின் இதயம் இசிஎம்ஓ சாதனத்தோடு இணைக்கப்பட்டது மற்றும் மார்பு திறந்திருந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே மும்பையிலுள்ள வாடியா குழந்தைகள் மருத்துவமனையில் வேறொரு ரத்தப்பிரிவைச் சேர்ந்த 2 வயதே நிரம்பிய மூளைச்சாவடைந்த குழந்தையிடமிருந்து இதயம் தானமாக கிடைக்கும் வாய்ப்பு இருக்கும் தகவல் கிடைத்தது. எனவே, தானமாக கிடைக்கப்பெறும் இதயத்துக்கான பொருத்தமான நபர் யாரும் இந்தியாவில் இல்லாத காரணத்தால் பல்கேரியாவைச் சேர்ந்த இந்த குழந்தைக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இக்குழந்தைக்கு உறுப்புமாற்று சிகிச்சையில் புதிய இதயம் பொருத்தப்பட்டது. முழுமையாக குணம்பெற்று இயல்புநிலைக்கு வர இக்குழந்தைக்கு இசிஎம்ஓ சாதனமும், மருத்துவ ஆதரவும் தேவைப்பட்டது.
இதற்கிடையே ஏபிஓ இணக்கமற்ற இதயம் பொருத்தப்பட்டிருப்பதால் எழக்கூடிய சிக்கல்களை கையாள்வதற்கு நோயெதிர்ப்பு ஒடுக்கி செயல்திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. உறுப்புமாற்று சிகிச்சையில் புதிய, இணக்கமற்ற (வேறு ரத்த பிரிவு)ரத்தப்பிரிவைச் சேர்ந்த இதயத்தைப் பெற்ற இக்குழந்தை இப்போது முழுமையாக குணமடைந்து நலமுடன் இருக்கிறது.

இது தொடர்பாக எம்ஜிஎம் ஹெல்த்கேர்-ன் இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று பிரிவு இயக்குநர் டாக்டர். பாலகிருஷ்ணன் கூறியதாவது: 1½ வயது குழந்தைக்கு செய்யப்பட்ட சிகிச்சை, மருத்துவ அறிவியலின் மாபெரும் சாத்தியத்திறனுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதோடு, மருத்துவர்களது திறனையும், மனஉறுதியையும் ஒத்துழைப்பு செயல்பாட்டின் பலனையும், சுட்டிக்காட்டுகிறது. கடும் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்திருப்பது, மருத்துவ சிகிச்சையின் வரம்பெல்லையை இன்னும் விரிவாக்குவதிலும் மற்றும் நோயாளிகளுக்கு வாழ்க்கையைத் தொடர இரண்டாவது வாய்ப்பை வழங்குவதிலும் மருத்துவர்களாகிய எங்களது பொறுப்புறுதியை மேலும் வலுவாக்க எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றரை வயது குழந்தைக்கு நடந்த இதய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: எம்ஜிஎம் மருத்துவமனை சாதனை; சிகிச்சைக்கு பின் பல்கேரிய குழந்தை நலம் appeared first on Dinakaran.

Tags : MGM Hospital ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...