×

சந்திரயான் – 3 வெற்றி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இந்தியா: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

சென்னை: சந்திரயான் – 3 வெற்றியின் மூலம் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளதாக சந்திரயான் – 1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 2008ம் ஆண்டு முதல்படியாக நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்தோம். அவை விதையாக இருந்தது தற்போது விருட்சமாக மாறியுள்ளது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. நிலவில் நாம் இறங்கி உள்ளது பகுதி மிக, மிக கடினமானது. அங்கு பல வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் 140 கோடி மக்களை தாண்டி இந்த வெற்றி உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதுவரை பல நாடுகள் நிலவின் தென் துருவ பகுதியை அடைய முயற்சித்து அவை தோல்வியில் தான் முடிந்துள்ளன. குறிப்பாக, சமீபத்தில் ரஷ்யா முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

* செயற்கை நுண்ணறிவால் பள்ளத்தை தவிர்த்த லேண்டர்
நிலவில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் இருந்து லேண்டர் தரையிறங்கியது முதலில் அதிக வேகத்தில் தரையிறங்கி தொடர்ந்து ஒவ்வொரு கட்டமாக வேகம் குறைக்கப்பட்டு படிப்படியாக தரையிறக்கம் நடைபெற்றது. அப்போது, சரியாக நிலவில் இருந்து 150 மீட்டர் முன்பு செங்குத்தாக இறங்கும் போது அந்த இடத்தில் சமமான பரப்பு இல்லாமல் பள்ளம் இருந்ததை லேண்டரில் உள்ள இடர் உணர் ஆபத்து தவிர்ப்பு கேமரா கண்டறிந்தது. லேண்டர் அங்கு சரியாக தரையிறங்க முடியாது என்பதால் உடனே இடர் உணர் ஆபத்து தவிர்ப்பு கேமராவின் தகவல் கொண்டு லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு சரியாக செயல்பட்டு சற்று தூரம் தள்ளி தரையிறங்கியது. கேமராவில் பள்ளத்தை கண்ட விஞ்ஞானிகள் சற்று அதிர்ந்து போனார்கள் ஆனால் அந்த இடத்தை சாதுரியமாக லேண்டர் தவர்த்ததால் நிம்மதி அடைந்தனர்.

* 13 முறை தோல்விக்கு பின் வெற்றி அடைந்த அமெரிக்கா
நிலவுக்கு விண்கலத்தை அனுப்புவது அத்தனை சுலபமல்ல. அமெரிக்கா, சோவியத் யூனியன் போன்ற நாடுகள் பல முறை முயற்சி செய்த பிறகுதான் நிலவில் தங்கள் விண்கலத்தை மோதச் செய்ய முடிந்தது. சோவியத் யூனியனை பொறுத்தவரை 5 முறை தோல்வியை தழுவியது. பின்னர் 1959 ஆணடு செப்டம்பர் 14 தேதி சோவியத் யூனியனின் லுனா2 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் மோதியது. அமெரிக்காவுக்கோ 13 தோல்விகள். அதன் பிறகே 1964ல் நாசா அனுப்பிய கோள் நிலவில் மோதியது. சீனா கடந்த 2013 முதல் 3 முறை தனது விண்கலங்களை நிலவில் தரைஇறக்கி உள்ளது. கடைசியாக கடந்த 2020ல் நிலவில் இருந்து 2 கிலோ மண்ணை சீன விண்கலம் பூமிக்கு எடுத்து வந்தது.

* மூன்று சந்திரயான் திட்டங்களுக்கும் இயக்குநராக பணியாற்றிய தமிழர்கள்
சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா கோதவாடி கிராமத்தில் மயில்சாமி அண்ணாதுரை பிறந்தார். பதினோராம் வகுப்பு வரையான தனது அடிப்படைக் கல்வியைத் தமிழில் அரசு பள்ளிகளிலேயே படித்தவர். பொறியியல் இளநிலையைப் பட்டப்படிப்பை அரசு தொழில் நுட்பக்கல்லூரியில் முடித்து, பொறியியல் முது நிலைப் பட்டப் படிப்பை தனியார் தொழில்நுட்பக்கல்லூரி முடித்தார். மேலும் பொறியியல் முனைவர் பட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

கல்லூரி முடிந்த உடன் முன்னணி தனியார் நிறுவனங்கள் மயில்சாமி அண்ணாதுரைக்கு பணி வழங்கத் தயாராக இருந்தன. ஆனால் விண்வெளி துறையில் இந்தியா சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்ரோவில் சேர்ந்து தனது பயணத்தை தொடங்கினார். இது வரை முப்பதுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கிய சாதனை இவரைச் சாரும். இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர். இவர் இருந்த காலகட்டத்தில் இஸ்ரோ பல சாதனைகள் படைத்துள்ளது. எனவே இவரை இந்தியாவின் நிலவு மனிதன் என்று அன்போடு அழைப்பார்கள்.

சந்திரயான் 2 திட்ட இயக்குநர் வனிதா: வனிதா சென்னையை சேர்ந்தவர். சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல்தொடர்பு துறையில் பட்டம் பெற்றவர். இஸ்ரோவில் முதல் முதலாக வன்பொருள் சோதனை மற்றும் மேம்பாட்டு போன்ற பல்வேறு துறைகளில் பணிபுரியும் இளநிலைப் பொறியாளராக சேர்ந்தார். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் இஸ்ரோவில் பணியாற்றிய வனிதா முத்தையா, இஸ்ரோவின் பல பெருமைக்குரிய விண்வெளித் திட்டங்களில் முக்கிய பங்கு வகித்தவர்.

கார்ட்டோசாட்-1, ஓஷன்சாட் -2, மற்றும் மேகா-டிராபிக்ஸ் உள்ளிட்ட பல செயற்கைக்கோள்களுக்கான திட்ட துணை இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து இஸ்ரோவிற்கு பணியாற்றிய இவர் சந்திரயான் 2 திட்ட இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். இஸ்ரோவில் விண்கோள்களுக்கிடையான திட்டப் பணிக்கு தலைமை தாங்கிய முதல் பெண் மற்றும் இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை பெற்றார். எனவே இவரை ”ராக்கெட் பெண்மணி” என்று அன்போடு அழைப்பார்கள்.

சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல்: வீர முத்துவேல் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை பழனிவேல் தெற்கு இரயில்வேயில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றியவர். விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் படித்து பின்னர், தனியார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியலில் பட்டயப் படிப்பினை முடித்தார். விண்வெளியில் இவருக்கு இருந்த ஆர்வம் காரணமாக தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். படிப்பை முடித்து சென்னை இந்திய தொழிநுட்ப கழகத்தில் விண்வெளி துறையில் ஆராய்ச்சி செய்தார். சிக்கலான வன்பொருள் குறித்த ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட வீர முத்துவேல், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் அறிவியலாளராக சேர்ந்தார். 30 ஆண்டுகள் பல திட்டங்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகு, வீர முத்துவேல் 2019ம் ஆண்டில் சந்திரயான் 3-ன் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

* இந்தியாவுக்கு வீரநாடு என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்துள்ளார் வீரமுத்துவேல்: – தந்தை பெருமிதம்
சந்திராயன் – 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவின் தந்தை பழனிவேலு விழுப்புரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக மக்கள் மட்டுமின்றி, இந்திய மக்களும் மறக்க முடியாத நாள். என்னுடைய மகனிடம் இந்த திட்டத்தை கொடுத்ததிலிருந்து, ஏற்றுக் கொண்டதிலிருந்து சந்திராயன் -3 வெற்றி பெற வேண்டும் என்று பல மாதங்கள் முயற்சி எடுத்துள்ளார். அவரது முயற்சி வீண்போகவில்லை. எனது மகனின் பெயருக்கு ஏற்றார்போல் வீரமுத்துவேல் வீரனாக இருந்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியாவை வீரநாடு என்ற பட்டத்தை பெற்றுகொடுத்துள்ளார். இன்று இந்திய மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

இந்தியா பெருமைக்குரிய நாடாக, சிறந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ரஷ்யா விண்கலத்தை நமக்கு போட்டியாக விட்டு தோல்வி அடைந்தது. இந்தியா வெற்றி பெற்றதன்மூலம் மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழக்கூடிய அளவிற்கு பெருமைக்குரிய நாடாக வந்திருக்கின்றது. குறிப்பாக பாரதப் பிரதமர் சந்தோஷமாக இருக்கிறார். சந்திராயன் திட்டம் பொறுப்பேற்றதிலிருந்து வீரமுத்துவேல் குடும்பத்தில் யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது. கடந்த 21ம் தேதி உடன்பிறந்த சகோதரி திருமணத்திற்கு கூட வரவில்லை. குடும்ப நிகழ்ச்சிக்கும் வந்தது கிடையாது. நானும் அவரது வேலைதான் முக்கியத்துவம் அதில் கவனம் செலுத்துமாறு கூறினேன். திருமணத்திற்கு வருவதைவிட இன்று(நேற்று) அதிக சந்தோஷம் கிடைத்துள்ளது’ என்றார்.

* டிவியை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்ட தந்தை…….
வீரமுத்துவேலின் தந்தையான ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பழனிவேலு சந்திரயான் – 3 நிலவில் கால் பதிக்கும் இந்த தருணத்திற்காக காத்திருந்ததாக தெரிவித்த நிலையில், தனது வீட்டில் நிலவில் இறங்கும் காட்சியை நேரில் கண்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.

* சொந்த ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…
நிலவில் வெற்றிகரமாக சந்திரயான் -3 கால் பதித்த நிலையில் இதன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் சொந்த ஊரான விழுப்புரத்தில் ரயில் நிலையம், காந்திசிலை உள்ளிட்ட பகுதிகளில் அருகில் விஞ்ஞானி வீரமுத்துவேல் படித்த முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

The post சந்திரயான் – 3 வெற்றி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த இந்தியா: மயில்சாமி அண்ணாதுரை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chandrayaan ,India ,Mylaswamy Annadurai ,Chennai ,Mailsamy Annadurai ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை