×

புளியங்குடி அருகே கிணற்றில் தள்ளி சிறுவன் கொலை `செல்போன் சிக்னல்’ மூலம் சிக்கிய போதை தந்தை: பரபரப்பு தகவல்

சிவகிரி: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகேயுள்ள தென்மலை செல்லிபட்டினம் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் முனியாண்டி (45). பெயின்டர். இவரது மனைவி கார்த்தீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முனியாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்று முன்தினம் முனியாண்டிக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மதுபோதையில் முனியாண்டி தனது இளைய மகன் மகிழன் (6) படிக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளார். பள்ளியில் இருந்த மகிழனை அழைத்து தன்னுடன் வந்தால் மிட்டாய் வாங்கித் தருவதாக முனியாண்டி கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய சிறுவன் மகிழன் தனது தந்தையுடன் மொபட்டில் பள்ளியில் இருந்து புறப்பட்டுள்ளான். ஆனால் அதன் பின்னர் மகிழன் பள்ளிக்கோ, வீட்டிற்கோ திரும்பவில்லை. மாலை வரை வீட்டிற்கு மகன் வராததை கண்ட கார்த்தீஸ்வரி சிவகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்இன்ஸ்பெக்டர்கள் சஜூவ், சஞ்ஜய்காந்தி ஆகியோர் பள்ளி சிறுவனை காணவில்லை என வழக்குப்பதிவு செய்து அவனை தேடி வந்தனர். இதனிடையே சிறுவனின் தந்தையும் திடீரென மாயமானார். அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். அவரது செல்போன் எண் இருப்பிடத்தை கண்காணித்து வந்தனர். அப்போது அவரது செல்போன் இருப்பிடம் சங்கரன்கோவில் அருகே வீரிருப்பு மற்றும் திருவேங்கடம் ஆகிய இடங்களை காட்டியது.

இதையடுத்து தனிப்படை போலீசார், இருப்பிடத்தை கண்காணித்தபடி அவரை பின்தொடர்ந்தனர். அப்போது திருவேங்கடத்தில் மொபட்டில் வந்த முனியாண்டியை போலீசார் மடக்கி பிடித்து துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 2 நாட்களுக்குமுன் மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டுக்கு சென்று திரும்பி வந்த நிலையில் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும் பின்னர் மதுபோதையில் தனது மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் அளித்த தகவலின்பேரில் புளியங்குடி பகுதியில் உள்ள நாணயம் என்பவரது தோட்டத்தில் கிணற்றில் இருந்து சிறுவன் மகிழன் உடலை போலீசார் மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக சிறுவன் உடல், நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடிபோதையில் பெற்ற மகனையே தந்தை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post புளியங்குடி அருகே கிணற்றில் தள்ளி சிறுவன் கொலை `செல்போன் சிக்னல்’ மூலம் சிக்கிய போதை தந்தை: பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : Buliangudi ,Sivagiri ,Muniyandi ,Chelliah ,Tenmalai Sellipatnam Street ,Sivagiri, Tenkasi District ,Puliangudi ,
× RELATED சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட்...