×

திமுக ஆட்சியில் 1.80 லட்சம் இடைநிற்றல் மாணவர்கள் பள்ளிகளில் சேர்ப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

திருவெறும்பூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி திருவெறும்பூர் அடுத்த குண்டூர் திருவளர்ச்சிப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் இன்று நடந்தது. கலெக்டர் பிரதீப் குமார் தலைமை வகித்தார். முகாமை துவக்கி வைத்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். முகாமில் கால்நடை இணை இயக்குனர் சீலா தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் பங்கேற்று கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடுநீக்க சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தாது உப்பு கலவை வழங்குதல், வெறிநோய் தடுப்பூசி, கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடுதல், தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டி: திருவெறும்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையை தரம் உயர்த்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு போட்டி தேர்வு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும். மாணவர்கள் இடைநிற்றலை சரி செய்வோம். தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வீடு வீடாக சென்று இடைநிற்றல் மாணவர்கள், அவர்களது பெற்றோரிடம் பேசி 1.80 லட்சம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளோம். வருங்காலத்தில் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் நிலையில் உள்ள மாணவர்களை முன்கூட்டியே கண்டறிந்து பிரச்னைக்கு தீர்வு காணப்படும். நாகமங்கலம் பகுதியில் இடைநீற்றல் அதிகமாக இருப்பது குறித்து கலெக்டருடன் கலந்து பேசி அதற்கு தீர்வு காணப்படும் என்றார்.

The post திமுக ஆட்சியில் 1.80 லட்சம் இடைநிற்றல் மாணவர்கள் பள்ளிகளில் சேர்ப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister Anbil Mahesh ,Thiruverumpur ,Tiruvalarchipatti, Guntur ,Trichy Thiruverumpur ,
× RELATED திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய...