×

ங போல் வளை…

நன்றி குங்குமம் டாக்டர்

யோகம் அறிவோம்!

யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி

கலக உடன்பிறப்புகள்

நாம் தொலைக்காட்சியில் கண்டு ரசித்த விளம்பரங்கள் அநேகம், அதில் சில நம் நினைவில் நீண்டநாட்கள் தங்கிவிடுவதுண்டு. அதில் ஒன்று , காரில் சென்றுகொண்டிருக்கும் நான்கு நபர்களில் ஒருவர் திடீரென பெண்ணாக மாறி அனைவர்மீதும் எரிந்து விழுவார், முகமெல்லாம் கடுகடுத்து எரிச்சல் கொண்டு சீறிக்கொண்டிருக்கும் பொழுது முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் நண்பன் ஒரு குறிப்பிட்ட சாக்லெட்டை எடுத்து கொடுத்து, நீ பசியுடன் இருக்கிறாய், இதை சாப்பிடு என சொல்ல, அதை வாங்கி உண்டபின், அந்த பெண்மணி இயல்பு நிலைக்கு மீண்டு ஆணாகவே அமர்ந்து சிரித்துக்கொண்டிருப்பார். சாக்லேட் கொடுத்த நண்பர் ‘பசி வந்தா நீ நீயா இருக்க மாட்ட, ஹீரோயின் மாதிரி நடந்துப்ப’ என கிண்டலடிப்பார்.

பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் இந்த காட்சி உண்மையில் மனித குணங்களில் நடவடிக்கைகளில் ஒருசிலவற்றை உற்று அவதானித்து எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. பசி என்பது நம் அனைவரையுமே நிலையழிக்க செய்யக்கூடியது, இதை நாம் அனுபவித்திருக்கிறோம். பசி மட்டும் தான் அப்படியானதா என்றால், மேலும் ஐந்து விஷயங்களையும் சேர்த்து. ‘ஷட் உர்மீ ‘ என ஆறு வகை இடர்களை, துன்பங்களை முன்வைக்கிறது நம் இந்திய மரபு. ஆயுர்வேதம் , யோகம், சம்ஹிதைகள், புராணங்கள் என பல இடங்களில் இதற்கான சான்றுகளும் விரிவான உரையாடலும் கிடைக்கிறது.

பசி, சோகம், மோகம், தாகம், முதுமை,மரணம் என்கிற இந்த ஆறுவகை திரிபுகளை ,துன்பகரமானவை என்றும் அதில் ஒவ்வொரு துன்பத்திற்கும் சில அளவுகளும், நம்மால் தாங்கிக்கொள்ள கூடிய திறனும், அவற்றை சரியாக நிர்வகிப்பதற்கான வழிமுறைகளையும் யோகம் போன்ற மரபுகள் விரிவாக பேசுகிறது. முதலில், நாம் பிறக்கும் பொழுது மூன்று கிலோ எடையுடன் இருக்கிறோம், பசி எனும் உணர்வின் மூலம் மட்டுமே உணவை உட்கொள்ள தொடங்கி பலமிக்க, உடல் வலுவுள்ள ஆற்றல் மிகுந்த, செயல்வேகத்துடன் இருக்கும் மனிதனாக மாறுகிறோம், இந்த வளர்ச்சிக்கு மூலகாரணமென்பது பசியெனும் உணர்வும் அதை போக்கிக்கொள்ள நமது பிரயத்தனங்களும் காரணமாகிறது.

எனினும், பசியைப் பிணி என்றும் , உபாதை என்றுமே நம் முன்னவர்கள் வகுக்கின்றனர், அதற்கிணையாகவே பசித்து புசித்தால் நூறு வயது வரை ஆரோக்யமாக வாழலாம் என்றும் சொல்கின்றனர், ஏனெனில் அதன் மீது நமக்கான கட்டுப்பாடு ஒருபோதும் எளிதானதல்ல, விரதம் இருக்கும் போதுகூட அந்த நாள் எப்போது முடியும் அடுத்து எதை உண்ணலாம் என்கிற எண்ணமே மேலோங்குகிறது, ஆக பசி எனும் உணர்வை கையாள தேவையான ஆற்றலை நாம் அடைவதை பற்றி இங்கே நிறைய பேசப்பட்டிருக்கிறது, யோகமரபின் பிராணாயாமப் பயிற்சிகளை சில குருகுலங்களில் பசியை கையாளும் கருவியாக மாற்றி அமைத்துக்கொள்வதுண்டு, ஆகவே அவர்களால் நம்மை விட ஆறு மடங்கு உணவை உட்க்கொண்டு செரிமானம் செய்துவிடவும் முடியும் , உண்ணாமல் சில நாட்கள் சோர்வின்றி செயல்படவும் முடியும், இது ஒரு வித்தை என்று நாம் புரிந்துகொள்வதை விட , இந்த பின்னால் இருக்கும் பசியை நிர்வகிக்க தேவையான ஆற்றலை அவர்கள் எந்த பயிற்சித் திட்டத்திலிருந்து பெறுகிறார்கள் என்பதை முதலில் கண்டடைய வேண்டும்.

அடுத்ததாக நம்மோடு ஒட்டிப்பிறந்த சோகம் எனும் மனத்துயர், பிறந்த முதல் சில வருடங்களில் மனத்துயர் என்பது இல்லாமலும், அல்லது அதன் தாக்கம் பெரிதாக இல்லாமலும் இருப்பதே இதன் இயற்கை பதின் பருவத்தை தொடும் நாட்களில் வளரத்தொடங்கி வாழ்நாள் முழுவதும் நம்முடன் வருவது இந்த மனத்துயர். நமக்கு பிடித்தவை அனைத்தும் நம்மை விட்டு நீங்கிவிடலாகாது என்பதிலும், நமக்கு பிடிக்காத ஒன்று நிகழ்ந்துவிடக்கூடாது என்பதிலும் மொத்த வாழ்வும் நம் செயலும் , மனமும் கட்டப்பட்டுள்ளது, என்பதால் துயரில்லாமல் வாழ்தல் என்பதை விட, துயரை நிர்வகிக்க தேவையான மன உறுதியை , அதற்கான வழிமுறை ஒன்றை கண்டடைதல் நமது முதல் கடமை. இதில் யோகம் என்பது சற்று சுலபமான அதே வேளையில் நிச்சயம் பலனளிக்கவல்ல வழிமுறை.

மூன்றாவதாக மோகம் அல்லது மாயாமோகம் எனப்படும் மாயை. நமது காமமும் , ஆசைகளும் , நுகர்வும் சாஸ்வதமானவை என நம்புவதும் அதற்காக வாழ்வின் பெரும்பகுதியை செலவிடுவதும் நமக்கு தரும் துன்பங்கள், இதில் பட்டினத்தார் போல காமத்தை முற்றிலும் துறந்தவர்களின் நிலைக்கும், நம்மைப் போன்ற சாமானியர்களுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. ஆகவே இருபது முப்பது வயதில் ஒருவருக்கு காமம் மிகுந்துள்ளது எனில் அதை இயற்கை என்றும், சமன் செய்ய உணர்ச்சிகளை வேறு புறம் திருப்புவதற்கும் கற்றுக்கொடுக்கலாம். ஆனால் அறுபது வயதிலும் காமம் மிகுந்துள்ள ஒருவரை சமன்கொள்ள செய்வது கடினம்.

அவருக்கு மீதியுள்ள வாழ்வும் போராட்டமாகவே அமைய முடியும். ஏனெனில் காம உணர்ச்சி கொப்பளித்துக் கொண்டிருக்கும் அவருக்கு உடல் தகுந்த ஆற்றலுடன் இருக்காது. ஆகவே நடுவயதைக் கடந்தவுடன் , இவ்வகை உணர்ச்சிகள் மீது சற்று கவனம் செலுத்தலாம். இந்த நூற்றாண்டின் முதன்மை சிக்கல்களில் இதுவும் ஒன்று.

நான்காவதாக பிபாசா எனப்படும் தாகம். நீரின்றி அமையாது உலகு என்பது ஐயன் சொல், நம் உடலோ உயிரோ இயங்க முக்கிய காரணியான நீர், தாகம் எனும் உணர்ச்சியால் உந்தப்பட்டு நாம் தேடி அதை அடைகிறோம், உடலுக்கான நீரின் தேவை மட்டுமே தாகம் என்று சொல்லிவிட முடியாது, உள்ளத்தின் தேவை அதை குறித்த ஏக்கம் என பல அடுக்குகளில் நாம் இங்கே தாகம் கொண்டிருக்கிறோம். அவ்வகை துயர்கள் உடலில் தொடங்கி ஆழ்மனம் வரை ஊடுருவக்கூடியவை.

அடுத்ததாக ஜரா எனும் முதுமை அல்லது மூப்படைதல். நாம் மூப்படைகிறோம் என்பதையே பெரும்பாலானோர் நம்புவதில்லை அல்லது ஒப்புக்கொள்வதில்லை, இதிலிருக்கும் சிக்கல் அவர்களை அறியாமேலேயே முதுமை அவர்களுடைய கண்முன் வந்து நின்றுவிடுகிறது, முதுமை அடைகிறோம் எனும் எண்ணத்தை முடிந்தவரை தள்ளிப்போட்டவர்கள் அல்லது நம்பாதவர்கள், மெல்ல மெல்ல முதுமையை ஒரு நோய் என எண்ணத்தொடங்கி, மீதி இருக்கும் வாழ்நாளை நோய்மை மிக்க முதுமையாக ஆக்கிக்கொள்கின்றனர், நம்மை சுற்றி பார்த்தால் முதுமையை இயல்பாக வாழ்ந்து கனிந்து கொண்டிருப்பவர்கள் மிகச்சிலரே, மீதமுள்ளோர் புலம்பல்களால் வாழ்வை நிறைத்துக்கொள்வதுண்டு. இலக்கியம் , கலை , ஆன்மீகம் ,ஆரோக்கியம் என ஏதேனும் ஒன்றில் தீவிர ஈடுபாடு இருந்தால் கூட அவர்களிடம் ஒருவகை உற்சாகம் குடிகொண்டிருப்பதை காண முடிகிறது.

ஆறாவதாக ம்ருத்யூ எனப்படும் மரணமெனும் உடன்பிறப்பு, மற்ற ஐந்திலும் ஓரளவாவது தெரிந்தும் , அறிந்தும் , அனுபவித்தும், கடந்து சென்றும் ஏதோ ஒரு முடிவுக்கு வரலாம், ஆனால் மரணமென்பதை யாராலும் கணித்து விடவோ ,கட்டுப்படுத்தவோ ,தள்ளிப்போடவோ ,ஏற்றுக்கொள்ளவோ முடிவதில்லை, ஆகவே , சிரஞ்சீவி , மரணமில்லா பெருவாழ்வு ,சாகாவரம் போன்ற கருத்துக்கள் மாயத்தன்மை மிக்க , புராண இதிகாச பாத்திரங்களாக நம்முடன் இருக்கிறது.

நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு மரணமென்பது வாழ்வின் ஒவ்வொரு சந்திப்பிலும் ஏதேனும் ஒரு வகையில் நிகழ்கிறது. யோக உளவியலின் படி இந்த உடலால் நிகழ்வது மட்டும் மரணமில்லை , மாறாக , ஒவ்வொரு முறை நாம் அதீத அச்சம் கொண்டு பதறும் பொழுதும் , இல்லாத ஒன்றை கற்பனைப் பயமாக மாற்றிக்கொள்ளும் பொழுதும் , உற்றார் உறவினர் குறித்த இழப்புகள் குறித்து பயம் கொள்ளும் பொழுதும் சிறு சிறு அளவில் நம்முள் ம்ருத்யு நிகழ்கிறது. ஆகவே ஒரு மந்திரத்திற்கு மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் என்றே பெயர், சாதாரண ம்ருத்யூ அல்ல மஹா ம்ருத்யூ, அதாவது மாபெரும் மரணம் – அதை வெல்லவே ம்ருத்யூ ஜெய மந்திரம்.

இந்த ஆறு துயர்களை வெல்லவே யோகமரபு மூன்று பிரிவுகளாக பயிற்சி திட்டத்தை வடிவமைத்துள்ளது. பசியும் தாகமும் பிராண மய கோசத்தை நிகர் செய்வதாலும் , சோகத்தையும் ,மோகத்தையும் மனோமய கோசத்தை சமன் செய்வதாலும் , முதுமையையும், மரணத்தையும் அன்ன மய கோசத்தை சமன் செய்வதாலும் முழுமையான வாழ்வை அடையலாம் என்கிறது. அதற்கான கல்வி நிலையும், ஆசிரியரும் அமைந்தால் இந்த ஆறு வித, கலகம் செய்யும் உடன்பிறப்புகளை சரியாக நிர்வகிக்க முடியும்.

The post ங போல் வளை… appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Yoga ,Selandararajan ,
× RELATED மசாலாக்களின் மறுபக்கம்