×

மாமல்லபுரத்தில் நாகம்மாள் திருஉருவ படத்தை திறந்து வைத்து விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை சேர்ந்த சிறுத்தை வீ.கிட்டுவின் தாய் நாகம்மாளின் 16ம்நாள் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று இரவு மாமல்லபுரத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, காஞ்சிபுரம் – செங்கல்பட்டு மாவட்ட மண்டல செயலாளர் மல்லை சிறுத்தை வீ.கிட்டு தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் இசிஆர் அன்பு, மல்லை நகர செயலாளர் ப.ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் மல்லை சாலமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் எம்பியுமான தொல்.திருமாவளன் கலந்துகொண்டு வீ.நாகம்மாள் திருஉருவ படத்தை திறந்து வைத்து பேசியதாவது:

விசிக கட்சி தொடங்கியபோது அனைத்து கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. விமர்சனங்கள், அவமானம், போராட்டாம் என அனைத்து இடங்களிலும் எதிர்ப்பை சந்தித்தோம். இது ஒருபுறமிருக்க காவல்துறையின் நெருக்கடிக்கு மத்தியில் நாம் அரசியல் செய்துகொண்டிருக்கிறோம். பாமக 5 சதவீதம், மதிமுக 3 சதவீதம், தேமுதிக 8 சதவீத வாக்குகளை தனித்து நின்று வாங்கிய பிறகும், தொடர்ந்து எங்களை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என கெஞ்சி கேட்ட பிறகே அதிமுக அவர்களை கூட்டணியில் சேர்த்தது. ஆனால், நாம் யாரிடமும் எங்களை கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுங்கள் என யாரிடமும் கெஞ்சவில்லை. கலைஞர், நீங்கள் வந்தால் கூட்டணி பலம்பெறும் என கூட்டணியில் சேர்த்தார். இதுபோல் சசிகலா மற்றும் நடராஜன் அதிமுக கூட்டணியில் சேர்த்தார்கள். வென்றாலும் தோற்றாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என கூறி 2 இடங்களில் வெற்றிபெற்றோம்.

2011ல் மக்கள் நலக்கூட்டணி அமைத்தோம். இன்னும் நாம் தனித்து நின்று வாக்கு வங்கியை உறுதிபடுத்தவில்லை. அதிமுக இன்று மிகப்பெரிய தடுமாற்றத்தில் உள்ளது. அந்த கட்சி இன்னும் எத்தனை நாள் இயங்கும் என்பதை நாம் தீர்மானிக்க முடியும். ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவற்றுடன் நேர்மையாக அரசியல் நடத்துபவர்கள் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களை சுட்டுப்போட்டாலும் நாட்டில் ஜாதியை ஒழிக்கமாட்டார்கள். காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சாதியை ஒழிக்கவேண்டும் என சொல்லவில்லை. உலகிலேயே சாதியை ஒழிக்கவேண்டும் என சொன்ன ஒரே தலைவர் அம்பேத்கர்தான். இன்று எந்த கட்சியும் அளிக்க முடியாத அளவில் பெண்களுக்கு 10 சதவீதம் அளித்திருக்கிறோம். அந்த வகையில், 14 மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படும் என சத்தியம் செய்து பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து பதவி வழங்கிய ஒரே கட்சி இந்தியாவிலேயே விசிகதான். இவ்வாறு திருமாவளவன் பேசினார். இதில், உஞ்சை அரசன், சூ.க.விடுதலைச்செழியன், தா.பார்வேந்தன், அ.நா.இளையவளவன், ஜெயந்தி, சிந்தனை சிவா, காவாஸ்கர், ஜெயராமன், பிரகாஷ், பிலிப், நவீன், அல்போ, சுகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மாமல்லபுரத்தில் நாகம்மாள் திருஉருவ படத்தை திறந்து வைத்து விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Vishika ,president Thirumavalavan ,Nagammal Thiruruva ,Mamallapuram ,Nagammal ,V. Kittu ,
× RELATED நீட் விலக்கை வலியுறுத்தி,...