×

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை ஐகோர்ட் தானாக விசாரணைக்கு எடுத்தது அமைச்சர்கள் பதிலளிக்க நீதிபதி உத்தரவு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு ஆகியோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் தங்கம் தென்னரசு. இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும் வருமானத்திற்கு அதிகமாக15-05-2006 முதல் 31-03-2010 வரையிலான காலத்தில் 76,40,443 சொத்து குவித்ததாக கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி 14 தேதி வழக்கு பதிவு செய்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 13ல் விசாரித்த தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.

இதேபோல், கடந்த 2006 -2011-ல் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக 44,59,067 மதிப்பிலான சொத்துகளை 01-04-2006 முதல் 31-03-2010 வரையிலான கால கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, ராமச்சந்திரன் நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 20 தேதி விருதுநகர் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். இந்த இரண்டு உத்தரவுகளுக்கு எதிராக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை இதுவரை மேல் முறையீடு எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் எம்.பி எல்.எல்.ஏ களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த இரு வழக்குகளிலும் விசாரணை அதிகாரியின் நடவடிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. இந்த வழக்குகளில் 2020வரை எதிர்ப்பு தெரிவித்த விசாரணை அதிகாரி ஆட்சி மாறியதுடன் எதிர்ப்பு தெரிவிக்காமல் வழக்கில் ஆதாரமில்லை என்று தெரிவித்து குற்றச்சாட்டை முடித்துவைத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், விசாரணை அதிகாரியின் விசாரணை முறையில் தவறு எதுவும் இல்லை என்றார். இதை கேட்ட நீதிபதி, இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களும், அரசு தரப்பும் ஒன்றாக இணைந்து செயல்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக இந்த கூட்டணிக்குள் நீதித்துறையும் சிக்கியுள்ளது. பின்பற்றப்பட்ட விதிமுறைகள் முற்றிலும் தவறானது. நான் யாருக்கும் எதிராக செயல்படவில்லை. இது போன்ற தவறை தடுத்தால் தான் எதிர்காலத்தில் இது போன்று நடக்காது.

அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளன என்றார். அதற்கு அட்வகேட் ஜெனரல், இந்த நடவடிக்கையால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் களங்கப்படுத்தப்படுவார்கள் என்றார். அதற்கு நீதிபதி, இந்த இரண்டு வழக்குகளிலும் விடுதலை செய்யப்பட்டவர்கள் செப்டம்பர் 20ம் தேதி பதில்தர வேண்டும். இந்த வழக்கு ஆவணங்களை உயர் நீதிமன்ற பதிவாளர் வாங்கி தாக்கல் செய்ய வேண்டும். இந்த உத்தரவு தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை ஐகோர்ட் தானாக விசாரணைக்கு எடுத்தது அமைச்சர்கள் பதிலளிக்க நீதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,Madras High Court ,KKSSR Ramachandran ,Thangam Tennarasu ,
× RELATED அதிமுகவில் இருந்து சசிகலாவை...