
ஆவடி: திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதமாக சென்ட்ரல் நோக்கி புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ஆவடி அருகே திருநின்றவூர் மற்றும் நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 7 மணியளவில் சென்ட்ரல் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மார்க்கத்தில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிமீ தொலைவில் திடீரென தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இவற்றை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருநின்றவூர் ரயில் நிலையம் முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும் நடுவழியே எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
பின்னர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல்களை சுமார் ஒரு மணி நேரம் போராடி ரயில்வே ஊழியர்கள் சீரமைத்தனர். இதைத் தொடர்ந்து, ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்த பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றன. இதனால் அந்தந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
The post திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே தண்டவாள விரிசலால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம் appeared first on Dinakaran.