×

10 ஏக்கரில் நெல் சாகுபடி; அசத்துகிறார் திருவள்ளூர் விவசாயி!

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள திருப்பாச்சூர் கிராமத்தில் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம், குத்தகை முறையில் 7 ஏக்கர் நிலம் என 10 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு அசத்தலான வருமானம் பார்த்து வருகிறார் ரமேஷ். குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தனது பசுமையான வயலில் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ரமேஷை சந்தித்தோம். தனது நெல் சாகுபடி குறித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“தாத்தா, அப்பான்னு பல தலைமுறைகளா விவசாயம் பண்ணிகிட்டு வரோம். இந்த பகுதியில எங்களுக்கு பூர்வீகமா 3 ஏக்கர் நிலம் இருக்கு. அதில தொடர்ந்து விவசாயம் பண்றோம். விவசாயம் மீது ஆர்வம் அதிகமா வந்ததால கூடுதலா 7 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்து பயிர் பண்றோம். இதில கடந்த முறை கரும்பு பயிரிட்டோம். இப்போ சீசன் நல்லா இருக்கறதால 10 ஏக்கர் நிலத்திலயும் இந்தியாவிலேயே அதிகம் விளையக்கூடிய எம்டியு 1010 என்ற நெல்லை நடவு செஞ்சிருக்கோம். இந்த வருசம் வெயில் அதிகமா இருந்த காரணத்தால நெல் பயிரிட வேண்டாம்னு இருந்தேன்.

ஆனா ஜூன் மாசத்துல எங்க பகுதியில நல்ல மழை பெஞ்சி, மண்ணெல்லாம் ஊறி ஈரமா இருந்துச்சு. அதைப் பார்த்த பிறகு நெல் பயிரிடலாம்னு நம்பிக்கை வந்துச்சி. தாத்தா, அப்பா விவசாயம் பார்க்கும்போது அவங்களுக்கு உதவியா இருந்துருக்கேன். துவக்கத்துல கிணறு, மழைத் தண்ணிய நம்பித்தான் விவசாயம் செஞ்சோம். 1998ம் வருசம் கிணத்தில் ஊத்து எடுக்குறது வெகுவா குறைஞ்சுது. அப்போதான் முதன்முதலா போர் போட்டு விவசாயம் செய்யத் தொடங்கினோம். நான் விவசாயத்தில் முழுவதுமா ஈடுபட்டதும் இந்த காலகட்டம்தான். எனது நிலத்தில் வருசத்திற்கு 3 போகம் விவசாயம் பண்றேன்.

அரசு பரிந்துரைக்கிற உரம், மருந்தைப் பயன்படுத்தி போர்வெல் போட்டு, டிராக்டர், அறுவடை இயந்திரம்லாம் பயன்படுத்தி தொடர்ச்சியா விவசாயம் பண்ணிட்டு வரேன். எம்டியு நெல் ரக விதையை நாற்றங்கால் அமைச்சி விதைப்போம். 10 ஏக்கருக்கு நடவு செய்ய 25 சென்ட் நிலத்துல நாற்றங்கால் அமைப்போம். அதுக்கு நிலத்தை புழுதி ஓட்டி, சேடை அமைத்து தயார்படுத்துவோம். எங்க நிலம் களிமண் பூமிதான். பொதுவாகவே களிமண் பூமி தண்ணீரைத் தக்க வெச்சுக்கிற பக்குவம் கொண்டதா இருக்கும். அதனால எங்களுக்கு குறைஞ்ச அளவுதான் தண்ணீர் விரயம் ஆகுது.

ஒரு ஏக்கருக்கு 30 கிலோ நெல் விதைகள் தேவைப்படும். நிலத்துக்கு தேவையான விதைகளை பூண்டி வேளாண்மை விதை நெல் மையத்திலிருந்து வாங்குறோம். தேவை அதிகமா இருந்தால் தனியார் நெல் விதைப்பண்ணைக்கு சென்று நானே தரம் பார்த்து விதையை வாங்கி வருவேன். விதை நெல்லை விதைப்பதற்கு முந்தைய இரவு தண்ணீரில் ஊற வெச்சுடுவேன். 12 மணி நேரம் நெல்லை நன்கு ஊற வச்சி தூவினால் நல்ல முறையில் வேர் பிடித்து வளரும். விதை தூவிய 7 லிருந்து 8 நாட்களுக்குள் பயிர்கள் முளைத்து பச்சை நிறத்துல வந்துரும். முதலில் செடியின் அளவைப் பொறுத்தே தண்ணீர் விடுவோம்.

இதற்கு முன்பு நிலம் காய்ந்துள்ளதா? ஈரப்பதத்துடன் உள்ளதா? என பார்த்த பிறகே தண்ணீர் விடுவேன். ஒருவேளை ஈரப்பதத்துடன் இருந்தால் இரண்டு நாளைக்கு ஒருமுறைதான் தண்ணீர் விடுவோம். அதில் பேய்ச்சலும், காய்ச்சலுமா தண்ணீர் விடணும். அதிக வெயிலால் நிலம் காய்ந்து இருந்தால் நடவுக்கு நாங்க இயந்திரத்தை பயன்படுத்துறது இல்ல. ஆட்களை வைத்துதான் நடவு செய்றோம். ஆட்களுக்கு மாறாக இயந்திரத்த பயன்படுத்தினா ஒரு நாற்று முறையில ஏக்கருக்கு 15 – 20 கிலோ விதை நெல் மட்டும் போதுமானதா இருக்கும்.

பயிர் முளைச்சி வர 20 நாள்ல களைக்கொல்லி மருந்து தெளிப்போம். நெல் பயிர்களுடன், முளைத்து வரும் களைகளை இது கட்டுப்படுத்தும். அதேபோல வயல் வரப்புகளை சீரமைச்சு தேவையில்லாத களைகளைப் பறித்தெடுப்போம். நாற்று முளைத்த 15வது நாளில் டிஏபி உரத்தை போடுவோம். இதோட விலை அதிகமா இருக்குறதால நாங்க காம்ப்ளக்ஸ், குருணைய பயன்படுத்துறோம். நாற்று விட்ட 25-30வது நாள்ல நாற்றுகளைப் பறிச்சி நடவு செய்வோம். நடவுக்கு முன்னதா நிலத்தை நன்றாக உழுது, புழுதி ஓட்டி, சேடை அமைப்போம்.

கடைசி உழவின்போது ஏக்கருக்கு 125 கிலோ பாக்டம்பாஸ் உரத்தை அடியுரமாக போடுவோம். நட்டதில் இருந்து 3-5 நாளில் களைக்கொல்லி தெளிப்போம். அதன்பிறகு தேவைப்படும்போது ஆட்களை வச்சி களையெடுப்போம். தேவையைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சுவோம். மணல் பூமியா இருந்தா 2 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சணும். களிமண் பூமியா இருந்தா 4 நாளுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சணும். நட்டதில் இருந்து 50-55 நாள்ல பயிரில் கதிர் வரத்தொடங்கும். பயிரும், கதிரும் நல்ல செழிப்பாக வளர ஏக்கருக்கு சல்பேட் ஒரு மூட்டை போடுவோம்.

இதிலிருந்து நாங்கள் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் பாய்ச்சுவோம். 105 நாட்கள் வரை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. நெல் விவசாயத்தை பொருத்தவரையில் முற்றிய கதிர் பாரம் தாங்காமல் தலை குப்புற இருந்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பார்கள். அது வைகாசி பட்டத்திற்கு பொருந்தாது. பயிர் முற்றிய தருணத்தில் பருவமழை பெய்யத் தொடங்குவதால் நெல்மணிகள் அழுகிப்போக அதிக வாய்ப்புகள் ஏற்படும்.

120வது நாளில் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும். அப்போது அறுவடை மிசினைக்கொண்டு அறுவடை செய்வோம். அறுவடை செய்த நெல்லை ஒரு மூட்டை ரூ.1250 என்ற விலையில் வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிட்டு போவாங்க. ஒரு ஏக்கரில் 28 மூட்டை வரை நெல் கிடைக்கும். ஒவ்வொரு மூட்டையும் 80 கிலோ என்ற கணக்கில் இருக்கும். சீசனைப் பொருத்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கிறோம். வயலில் நெல்லை அறுவடை செய்து அரசின் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து செலவாக சில ஆயிரம் ரூபாய் தேவைப்படும்.

ஆனால் தனியார் அரிசி ஆலைகள் வயலுக்கு வந்து நெல்லை கொள்முதல் செய்வதால் அந்த பணம் எங்களுக்கு மிச்சமாகுது. தனியார் அரிசி ஆலைகள் நெல்லை அளக்கும் முறையில் ஒரு சில மாறுபாடு இருக்கிறது. சிலர் ஒரு மூட்டைக்கு 62 கிலோவை பெறுகின்றனர். சில ஆலைகள் 63 கிலோ இருந்தால்தான் ஒரு மூட்டை என கணக்கில் எடுத்துக்கிறாங்க. ஆனால் எங்கள் பகுதியில் 80 கிலோ என்ற அளவிலே நெல்லை வாங்கிக்கிறாங்க.

பத்து ஏக்கருக்கு 280 நெல் மூட்டைகள் கிடைக்கும். இதில் ஒரு போகத்திற்கு வருமானமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரும். இதில் ஆட்கள் கூலி, இயந்திரக் கூலி, உரச்செலவு, பராமரிப்புச் செலவு என மொத்தமா ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் செலவாகும். அதுபோக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் லாபமாக கிடைக்கும். சீசனைப் பொருத்தும், நெல்லின் தரத்தைப் பொருத்தும் விலையில் சற்று ஏற்றம், இறக்கம் இருக்கும். ஒருவேளை சன்ன ரக நெல்லாக இருந்தால் நல்ல லாபம் கிடைக்கும்’’ என்கிறார் ரமேஷ்.

வருமுன் காப்போம்

விவசாயத்தின் நண்பனாக எப்படி மண்புழு இருக்கிறதோ, அதே மாதிரி விவசாயத்திற்கு எதிரிகளாக சிலவகை பூச்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் பயிர்களில் அதிக சேதம் ஏற்படுத்தும் பூச்சியாக குருத்துப்பூச்சி விளங்குகிறது. இந்த பூச்சிகள் வயல்களுக்கு வருவதற்கு முன்பாகவே, பயிர்களைக் காப்பது முக்கியம். நெல் பயிரை குருத்துப்பூச்சிகள் தாக்கினால் ஏக்கருக்கு மானோகுரோட்டோபாஸ் 36% இ.சி 400 மில்லியை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

அதேபோல நடவு வயலிலும், வரப்பிலும், பாசன வாய்க்காலிலும் களைச்செடிகளை அகற்றி வரப்பினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வயலில் அறுவடைக்குப் பின் அடிக்கட்டைகளை உழுது அழித்துவிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் அடுத்தமுறை விவசாயம் செய்யும்போது கெட்ட பூச்சிகளின் தாக்குதல் குறைவாக இருக்கும். இல்லையென்றால் அடிக்கட்டைகளில் பூச்சிகள் மிகுந்து, அடுத்த போக விளைச்சலைத் துவம்சம் செய்துவிடும்.

தொடர்புக்கு:
ரமேஷ் – 97892 89844.

தொகுப்பு: சுரேந்திரன் ராமமூர்த்தி

படங்கள்: பழனி

The post 10 ஏக்கரில் நெல் சாகுபடி; அசத்துகிறார் திருவள்ளூர் விவசாயி! appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tirupachur ,Poondi ,Tiruvallur ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்