×

சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைய நாடு முழுவதும் பிரார்த்தனை; வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு.. கங்கா ஆரத்தியில் மூவர்ண கொடிகளுடன் பங்கேற்பு..!!

டெல்லி: சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைய வேண்டி நாடு முழுவதும் பொதுமக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரயானை முன்னிறுத்தி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் அரங்கேறி வருகின்றன. சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்தாலும் அதன் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருப்பதால் சந்திரயான் 3 திட்டத்திற்கு பெரும் உதவியாக உள்ளது. முந்தைய தவறுகளை சரி செய்து இம்முறை லேண்டரை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்க இஸ்ரோ முனைப்புடன் உள்ளது. இந்த நிலையில் இந்த திட்டம் வெற்றியடைய வேண்டி நாடு முழுவதும் பல்வேறு வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடந்த கங்கா ஆரத்தியில் மூவர்ண கொடிகளுடன் பலர் பங்கேற்றனர். உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற வேண்டி நடத்தப்பட்ட கோல போட்டியில் பல பெண்கள் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதேபோல ஒடிசாவின் பூரி கடற்கரையில் சந்திரயான் 3 திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்து மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்திருந்த மணற்சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வெளிநாடுவாழ் இந்தியர்களும் சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைய வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் அதற்காக யாகம் நடத்தப்பட்டது. சந்திரயான் 3 திட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்கம் உட்பட நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இதற்காக கடுமையாக உழைத்துள்ளதாக கூறிய அவர், எந்த அரசியல் கட்சிக்கும் அதில் பங்கில்லை என தெரிவித்துள்ளார். இதேபோல உலகம் முழுவதும் இருந்து சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

The post சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைய நாடு முழுவதும் பிரார்த்தனை; வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு.. கங்கா ஆரத்தியில் மூவர்ண கொடிகளுடன் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chandrayan 3 ,Ganga ,Aerthi ,Delhi ,Chandrayaan ,Chandrayan ,3 ,Initial ,
× RELATED கங்கை அம்மன் கோவில் திருவிழா; வேலூர்...