×

தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்: கலெக்டர் வெளியிட்டார்

தூத்துக்குடி, ஆக. 23: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான செந்தில்ராஜ் தலைமை வகித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டார். மாவட்டத்தில் கடந்த ஜன.5ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி ஒரு வாக்குச்சாவடிக்கு 1500 வாக்காளர்களை மட்டும் அனுமதிக்கும் வகையில், மாவட்டத்தில் 1480 – 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் மற்றும் 2 கி.மீ. அப்பாலுள்ள வாக்குச்சாவடிகள் என திருச்செந்தூர் தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளும், வைகுண்டம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 3 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளன.

மேலும் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் 28 இடமாற்றம் செய்யும் பணி, 28 வாக்குச்சாவடிகள் கட்டிட மாற்றம் செய்யும் பணி, 27 வாக்குச்சாவடிகள் பெயர் மாற்றம் செய்யும் பணி, 33 வாக்குச்சாவடிகளில் பிழை திருத்தம் செய்யும் பணி, 9 வாக்குச்சாவடிகள் பிரிவு மாற்றம் செய்யும் பணி ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடி மறுவரையறை பணிகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணியில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீதும் விசாரணை முடித்து அனைத்து மனுக்களையும் முடிவு செய்து மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், வரும் அக்.17ம் தேதி வெளியிடப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சப்-கலெக்டர் கவுரவ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆனந்தசேகரன்(திமுக), சுப்பிரமணியன் (திமுக), சந்தனம் (அதிமுக), கிஷோர்குமார் (பாஜ), சிவராமன் (பாஜ), முத்துமணி (காங்கிரஸ்), குணசீலன்
(ஆம் ஆத்மி), நாராயணமூர்த்தி (தேமுதிக), சிவா (பகுஜன்சமாஜ்) ஆகியோர் பங்கேற்றனர்.

The post தூத்துக்குடி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்: கலெக்டர் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Tuticorin District ,Tuticorin ,District Collector ,Senthilraj ,District ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் சர்வதேச யோகா தினம்