×

மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பெற்றோர்கள் சாலை மறியல்: கீழ்பென்னாத்தூர் அருகே பரபரப்பு

கீழ்பென்னாத்தூர், ஆக. 23: கீழ்பென்னாத்தூர் அருகே மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பஸ்சை சிறைபிடித்து பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கீக்களூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10ம் வகுப்பு வரை 130க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை 8ம் வகுப்பு ஸ்மார்ட் கிளாஸ் நடந்தது. அப்போது வகுப்பறையில் மாணவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாய் தகராறு குறித்து ஒரு தரப்பு மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பள்ளிக்கு விரைந்து வந்த பெற்றோர்கள் வாய் தகராறில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் தகராறில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கு வெளியே மற்றொரு தரப்பு மாணவர்களை அடித்ததாகவும் மாணவர்களின் வீட்டிற்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனால் அப்பள்ளியில் பயிலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் உறவினர்கள் நேற்றிரவு திருவண்ணாமலையில் இருந்து அவலூர்பேட்டை நோக்கி சென்ற டவுன் பஸ்சை செவரப்பூண்டி கிராமத்தில் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல் நிலைய போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மாணவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்து அரசு பஸ்சை விடுவிக்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பெற்றோர்கள் சாலை மறியல்: கீழ்பென்னாத்தூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kilibennathur ,KILIPENNATHUR ,Dinakaran ,
× RELATED விவசாய பாசனத்திற்கு தண்ணீரின்றி...