×

ஊட்டி படகு இல்லத்தில் ரூ.5 கோடியில் வளர்ச்சி பணி

 

ஊட்டி, ஆக.23: ஊட்டி படகு இல்லத்தில் பல்வேறு சாகச விளையாட்டுக்கள் துவக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.5 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் தற்போது நடந்து வருகிறது. ஏரியின் குறுக்கே தொங்கும் பாலம், ஜிப் லைன், ஜிப் சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதற்கான கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை, தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது, மலை மாவட்டமான நீலகிரி சுற்றுலா மையமாக விளங்குகின்ற காரணத்தினாலும், வருடந்தோறும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்ற காரணத்தினாலும், அவர்கள் கண்டுகளிக்கும் வகையில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேம்படுத்திட தமிழக முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில், பல்வேறு சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுற்றுலா மாவட்டங்களில் மிக முக்கிய மாவட்டமாக திகழ்கிறது.

ஊட்டிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடம் உதகை படகு இல்லம் ஆகும். மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், பல்வேறு பொழுது போக்கு சாகச சுற்றுலாவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு, தற்போது படகு இல்லம் சுற்றி உள்ள பகுதியில் மாபெரும் ஊஞ்சல், தொங்கு பாலம், ஜிப் சைக்கிளிங், பங்கீ ஜம்பிங், ரோலர் கோஸ்டர், குடில்கள், மரவீடு அமைப்பது, வாகனம் நிறுத்தும் பகுதி போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் குணேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் குணசேகரன், ஊட்டி படகு இல்லம் மேலாளர் சாம்சன் கனகராஜ், உதவி சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டி படகு இல்லத்தில் ரூ.5 கோடியில் வளர்ச்சி பணி appeared first on Dinakaran.

Tags : Ooty Boat House ,Ooty ,Ooty Boathouse ,Dinakaran ,
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...