×

மாநகராட்சியில் ரூ300 கோடி வருவாய் பெருக்க நடவடிக்கை

சேலம், ஆக.23: சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கமிஷனர் பாலசந்தர், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: செல்வராஜ் (அதிமுக): ஒவ்வொரு வார்டுக்கும் கவுன்சலிங் மூலம் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 10 பேரை போட்டுள்ளீர்கள். தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள பணி என்ன? சுகாதார ஆய்வாளர், மேற்பார்வையாளருக்கு என்ன பணி என்பது பற்றி விளக்கமாக தெரிவிக்க aடும். மாநகராட்சியில் இருந்து தனியாருக்கு ₹70 கோடி கொடுக்கிறோம். ஆந்திராவில் இந்த தனியார் நிறுவனம் சரியாக செயல்படவில்லை என நிராகரித்துள்ளனர்.

கமிஷனர் பாலசந்தர்: 20 மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு கொடுக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இது அரசின் கொள்கை முடிவு. அதன்படி 18 மாநகராட்சி இதனை செயல்படுத்தியுள்ளது. நாம் கடைசி கட்டத்தில் செயல் படுத்துகிறோம். இந்த குழப்பம் இரண்டு மாதத்தில் சீராகிவிடும். சூரமங்கலம், அஸ்தம்பட்டி மண்டலத்தில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் குறைவாக இருந்தனர். அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் அதிகளவில் இருந்தனர். அவர்களில் 10 பேரை கவுன்சலிங் மூலம் போட்டுள்ளதால் தற்போது சூரமங்கலம், அஸ்தம்பட்டியில் பணியாளர்கள் சரியாக உள்ளனர். மேலும் குறைவாக உள்ள இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகிறோம்.

தனியாருக்கு மாநகராட்சியின் அனைத்து தூய்மை பணிக்கான வாகனங்கள் கொடுக்கப்படுகிறது. அரசு அறிவித்துள்ளபடி அதற்கு வாடகை கொடுக்கின்றனர். குப்பைகளை வீடுகள்தோறும் சென்று சேகரிப்பர். நிரந்தர பணியாளர்கள் சாக்கடை கால்வாய், சாலை சுத்தம் செய்தல் மற்றும் உரம் மையத்தில் பணியாற்றுவர். எவ்வளவு டன் குப்பை சேகரிக்கப்படுகிறதோ அதற்கான பணத்தை தான் தனியாருக்கு கொடுக்கிறோம். குணசேகரன்(திமுக): மாநகராட்சியில் இதுபோன்று மாற்றத்தை ஏற்படுத்தும்போது அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்து பேசியிருக்க வேண்டும். நாங்கள்தான் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். கிச்சிபாளையம் மயானத்துக்கு எரிவாயு தகன மேடை அமைத்து தர வேண்டும்.

இமயவர்மன்(விசிக): தூய்மை பணியில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்ப தற்போது பணி வழங்கப்பட்டுள்ளதற்கு மனமார்ந்த பாராட்டுகள். அனைத்து பணிக்குழுக்களும் சுதந்திரமாக செயல்பட வேண்டும்.
வரதராஜ்(அதிமுக): எனது வார்டில் உள்ள ஓடைகளை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மை பணியில் போதிய ஆட்களை போட வேண்டும். யாதவமூர்த்தி (எதிர்கட்சி தலைவர்): எனது வார்டில் வார்டு அலுவலகம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. தற்போது ஏன் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றுகிறீர்கள். மேயர் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறார். வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தான் இதை தடுக்கிறார் என்றார்.

இதற்கு, திமுக கவுன்சிலர்கள் அவரது இருக்கைக்கு சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் அதிமுக கவுன்சிலர்கள் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்களை பேச விடாததை கண்டிக்கிறோம் என கோஷமிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேயர் ராமச்சந்திரன்: மாநகராட்சியில் உள்ள குறைகளை மட்டும் பேசுங்கள். தனிநபர்களை தாக்கி எதுவும் பேசக்கூடாது. மக்களின் குறைகளை மட்டும் பேச வேண்டும். இதையடுத்து திமுக, அதிமுக கவுன்சிலர்கள் அவரவர்களின் இருக்கைக்கு சென்றனர்.

தொடர்ந்து பேசிய மேயர், 36வது வார்டை கமிஷனரும், நானும் நேரில் பார்த்து ஆய்வு செய்கிறோம் என்றார்.
யாதவமூர்த்தி(எதிர்க்கட்சி தலைவர்: வஉசி மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட், ஈரடுக்கு பேருந்து நிலையம் கடைகள், மல்டிலெவல் கார் பார்க்கிங் ஆகியவை ஏலம் ஏன் விடவில்லை.
கமிஷனர் பாலசந்தர்: மாநகராட்சியில் வருவாய் பெருக்க வணிக, சொத்து வரி என 7இனங்கள் கண்டறியப்பட்டு குறைவாக உள்ள வரியை சீராக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சியில் ₹200 முதல் ₹300 கோடி வரை வருவாய் அதிகரிக்கும். வஉசி மார்க்கெட் ஏலம் விடப்பட்டுள்ளது. மற்றவை இந்த மாத இறுதியில் ஏலத்தில் விடப்படும். தொங்கும் பூங்கா, கோட்டை திருமண மண்டபங்கள் வாடகை குறைத்து உரிய ஏலம் விடப்படும். இதனைதொடர்ந்து ஆளுங்கட்சி தலைவர் தமிழரசன் அனைத்து தீர்மானங்களையும் வாசித்து நிறைவேற்றினார்.

The post மாநகராட்சியில் ரூ300 கோடி வருவாய் பெருக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Corporation ,Council ,Mayor ,Ramachandran ,Commissioner ,Balachandar ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகள் மூடல்