×

விதி மீறிய 10,500 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

தர்மபுரி, ஆக.23: தர்மபுரி உட்கோட்டத்தில் கடந்த 8 மாதத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனங்கள் ஓட்டியதாக, 10,500 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து சுமார் ₹60 லட்சம் அபாரதத்தொகை வசூலித்து, அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக டிஎஸ்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சமூக நீதி மற்றும் சமூக உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம், சென்னை காவல்துறை தலைவர் உத்தரவுபடி 100 இடங்களில் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி டிஎஸ்பி உட்கோட்டத்தில், தர்மபுரி எஸ்வி ரோடு, அதியமான்கோட்டை, செம்மாண்டகுப்பம் ஆகிய கிராமங்களில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. செம்மாண்டகுப்பத்தில் நடந்த சமூக நீதி மற்றும் சமூக உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாமிற்கு, ஊராட்சி மன்றத்தலைவர் பானுபூமணி தலைமை வகித்தார்.

முகாமில், தர்மபுரி மாவட்ட சமூக நீதி மற்றும் சமூக உரிமைகள் பிரிவு டிஎஸ்பி ஜெயக்குமார், தர்மபுரி சட்ட ஒழுங்கு பிரிவு டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இம்முகாமில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவி அருள்ஞானசேகரன், வட்டாட்சியர் சரவணன், புள்ளியல்துறை ஆய்வாளர் உஷாராணி, ஊராட்சி செயலர் இடும்பன், பசுமை தாயகம் வக்கீல் மாது, ஊர்கவுண்டர், மந்திரி கவுண்டர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் மாவட்ட சமூக நீதி மற்றும் சமூக உரிமைகள் பிரவின் கீழ் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள், உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முகாமில் டிஎஸ்பிக்கள் பேசியதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போதை பொருட்கள் பழக்கதை ஆரம்ப கட்டத்திலயே கண்டறிந்து தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் முத்திவிடும். மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் தீமைகள் குறித்து பெற்றோர்கள் எடுத்துரைக்க வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டினால் ₹10ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. டூவிலர் ஓட்டும்போது கட்டாயமாக தலைகவசம் அணிய வேண்டும். சிறுவர்களுக்கு தேவை இல்லாமல் விலை உயர்ந்த டூவிலர்களை வாங்கிக்கொடுக்காதீர்கள். நல்லபடிப்பை அவர்களுக்கு கொடுங்கள். நல்லது எது, கெட்டது எது என்று பெற்றோர்கள் எடுத்துக்கூற வேண்டும். ஊர்களில் போதை பழக்கதை ஊக்குவிக்கும் சமூக விரோதிகள் பற்றி தெரிந்தால், உடனே காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தகவல் தெரிவிக்கும் நபர்களின் செல்போன் எண் ரகசியமாக காக்கப்படும். வீட்டிலோ, தெருக்களிலோ பிரச்னை நடந்தால், வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வரும் ஆண்களிடம் உடனே பெண்கள் கூறாதீர்கள். நேரம், காலம் பார்த்து கூற வேண்டும். இல்லையென்றால் பெண்களே அந்த பிரச்னை முடிந்த வரை தீர்க்கபார்க்க வேண்டும். இல்லையென்றால் கணவர் வீட்டிற்கு வந்த பின்னர் விவரத்தை தெரிவித்து விட்டு, அதன்பின் காவல்நிலையத்தில் தகவல் அல்லது புகார் அளிக்கலாம். இதன் மூலம் குடும்ப பிரச்னை, ஊர் பிரச்னை, சமூக பிரச்னை ஏற்படாது. இவ்வாறு பேசினர். தர்மபுரி சட்ட ஒழுங்கு பிரிவு டிஎஸ்பி செந்தில்குமார் கூறியதாவது: தர்மபுரி உட்கோட்டத்தில் உள்ள தர்மபுரி, அதியமான்கோட்டை, தொப்பூர், மதிகோண்பாளையம், கிருஷ்ணாபுரம் ஆகிய 5 காவல்நிலையத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போதைய வரை வாகன விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாகனம் ஓட்டியதாக 10,500 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து, சுமார் ₹60லட்சம் அபாரதத்தொகை வசூலித்து, அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக, 242 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காதில் செல்போன் வைத்துக்கொண்டே வாகனம் ஓட்டியதாக 765 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 53பேர் மீதும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்ற 126 வாகன ஓட்டிகள், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 3,300 நபர்கள், காரில் சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக 1,346பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 8 மாதத்தில், மொத்தம் 10,500 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

The post விதி மீறிய 10,500 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Utkotam ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...