
கரூர், ஆக. 23: குற்றவியல் சட்டங்களின் ஷரத்துகளை மாற்றும் ஒன்றிய அரசின் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தாந்தோணிமலையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மாரப்பன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர்கள் நவநீதன், செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், பார்த்தீபன், சம்பத், பாலாஜி உட்பட அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ள ஒன்றிய அரசு, அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் மூன்று முக்கிய பிரிவான இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் என இந்த மூன்றின் பெயரையும் சமஸ்கிருதத்தில் மாற்றியும், மசோதாவில் பல்வேறு ஷரத்துகளை புதிதாக திணித்துள்ளதால், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் புதிய மசோதா, நாடு முழுதும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களின் கருத்துகளை கேட்காமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், அதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
The post குற்றவியல் சட்டங்களை திருத்தும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து 2வது நாளாக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.