
திருவள்ளூர், ஆக. 23: திருவள்ளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனருமான என்.ஓ.சுகபுத்ரா தலைமை தாங்கி திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், 15வது நிதி குழு மானிய திட்டப் பணிகள், தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி மையம் கட்டுதல், குடிநீர் திட்ட பணிகள், தெருவிளக்கு அமைத்தல் உள்பட ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு திட்ட பணிகள் எந்தெந்த இடங்களில் நடைபெறுகிறது. அவ்வாறு தொடங்கப்பட்ட பணிகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும், முடிக்கப்படாமல் உள்ள பணிகள் மற்றும் காலதாமதம் ஏற்படும் பணிகளை விரைந்து முடிக்கவும் மாவட்ட கூடுதல் கலெக்டர் என்.ஓ.சுகபுத்ரா உத்தரவிட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குணசேகரன், மாணிக்கம், மேலாளர் (நிர்வாகம்) விஜயகுமார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post திருவள்ளூர் ஒன்றியத்தில் திட்டப் பணிகள் ஆலோசனை கூட்டம்: ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.