×

கடந்த 8 மாதங்களில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 41 சர்வதேச நோயாளிகளுக்கு சிகிச்சை

 

சென்னை, ஆக.23: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 8 மாதங்களில் 41 சர்வதேச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை ஆகும். தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சென்னை தவிர வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களான ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.

3,500 படுக்கைகள், 800 மருத்துவர்கள், 890 நர்ஸ்கள், 750 உதவியாளர்களுடன் செயல்படும் இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், மூட்டு, தசை மற்றும் இணைப்பு திசு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்னைகள், புற்றுநோய், நாளமில்லா சுரப்பிகள் சார்ந்த கோளாறுள், எலும்பு நோய்கள், ரத்த நாளங்கள், நரம்பு நோய்கள், இரைப்பை மற்றும் குடல் நோய்கள், முதியவர்களுக்கான சிகிச்சைகள், கல்லீரல், சர்க்கரைநோய், நெஞ்சக நோய்கள் என அனைத்து பிரச்னைகளுக்கும் மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்காக தனித்தனி பிரிவுகள் உள்ளன.

மேலும், ரத்த நோய்கள், பாலியல் தொடர்பான பிரச்னைகள், சரும நோய்கள், மனநல பிரச்னைகள் ஆகியவற்றுக்கும் மருத்துவ சிகிச்சையளிக்க தனி பிரிவுகள் உள்ளன.மேலும், கதிரியக்க சிகிச்சை, நுண்வழி அறுவை சிகிச்சை, மயக்கவியல் துறை என பல்வேறு துறைகளுடன் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டிருக்கிறது. அவசர சிகிச்சையளிக்க, `ஜீரோ டிலே வார்டு’ என்ற சிறப்பு பிரிவும் இருக்கிறது. இக்கட்டான நிலையில் ஆம்புலன்சில் வருபவர்களை உடனடியாக அந்தந்த வார்டுகளுக்குத் தூக்கி செல்வதற்கு ஷிப்டுகளில் 3 பேர் வீதம் 9 அவசர சிகிச்சை உதவியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இங்கு, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் சிகிச்சை பெறுகின்றனர். அதன்படி, வங்கதேசத்தில் இருந்து சென்னைக்கு வந்த 67 வயது முதியவர், சமீபத்தில் நெஞ்சுவலி காரணமாக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில், அவருக்கு இதயத்தில் இரண்டு அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு, 2 ஸ்டென்ட்கள் வைக்கப்பட்டன. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறுகையில், ‘‘வெளிநாடு மற்றும் வெளி மாநில நோயாளிகள் அதிகளவில் இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர். மாநில அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி அவர்களிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை இந்த மருத்துவமனையில் 41 சர்வதேச நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதில், வங்கதேசத்தை சேர்ந்த 26 பேர், நைஜீரியாவை சேர்ந்த 6 பேர், கானா குடியரசு நாட்டை சேர்ந்த 4 பேர் மற்றும் ஒரு சிலர் இலங்கையை சேர்ந்தவர்கள். இது, தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் பல நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்துவிட்டு பலனில்லாமல் இங்கே வந்து சிகிச்சை பெற்றவர்கள் ஏராளம்,’’ என்றார்.

The post கடந்த 8 மாதங்களில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 41 சர்வதேச நோயாளிகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Rajiv Gandhi Government Hospital ,Chennai ,Dean ,Dinakaran ,
× RELATED வெப்பத்தால் ஏற்படும்...