×

அதிமுக ஆட்சியில் மாநகராட்சி முறைகேடு புகார்; அறப்போர் இயக்கம் மீதான 2 வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சியில் மாநகராட்சி முறைகேடு தொடர்பாக வீடியோ வெளியிட்டதாக அறப்போர் இயக்கம் மீது தொடரப்பட்ட 2 வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து அறப்போர் இயக்கம் வீடியோ எடுத்து கடந்த 2019 பிப்ரவரி மாதம் இணையதளத்தில் வெளியிட்டது. மக்கள் மத்தியில் மாநகராட்சிக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல, சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் ஆற்று மணலுக்கு பதில் எம்.சாண்ட் பயன்படுத்த அனுமதித்தது குறித்து அதே ஆண்டு மற்றொரு வீடியோவை அறப்போர் இயக்கம் வெளியிட்டது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் சக்தி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெயராம் வெங்கடேசன் மீது மற்றொரு வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர். அதிமுக, ஆட்சிக்காலத்தில் பதிவான இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஜெயராம் வெங்கடேசன் மனுக்கள் தாக்கல் செய்தார். இந்த மனுக்களை நீதிபதி என்.ஆனந்த் வெங்கேடஷ் விசாரித்து, இரு வழக்குகளையும் ரத்து செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

The post அதிமுக ஆட்சியில் மாநகராட்சி முறைகேடு புகார்; அறப்போர் இயக்கம் மீதான 2 வழக்கு ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,ICourt ,CHENNAI ,Arapor Movement ,Arapor ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...