×

சொத்து குவிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் இன்று தாமாக விசாரிக்கிறது

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசுவை விடுவித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு இருந்தார். இவர் மீதும், இவரது மனைவி மணிமேகலை மீதும் வருமானத்திற்கு அதிகமாக 2006 மே 15ம் தேதி முதல் 2010 மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் ரூ.76,40,443 சொத்து குவித்ததாக கடந்த 2012 பிப்ரவரி 14ம் தேதி வழக்கு பதிவு செய்த விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரின் மனைவி மணிமேகலை ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், அரசியல் காரணங்களுக்காக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்ததாகவும் எனவே, சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி விசாரிக்க உத்தரவிட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை இருவரையும் விடுவித்து உத்தரவிட்டார்.

கடந்த 2006-11ல் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.44,59,067 மதிப்பிலான சொத்துகளை 2006 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2010 மார்ச் 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சேர்த்ததாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, ராமச்சந்திரன் நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது கடந்த 2011 டிசம்பர் 20ம் தேதி விருதுநகர் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் சில வருவாய் ஆதாரங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனக் கூறியும், 28 வருவாய் விவரங்களை தாக்கல் செய்து, தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் மனு தாக்கல் செய்தனர். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாக்கல் செய்த 28 வருவாய் விவரங்கள் குறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, 10 வருவாய் இனங்களை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்து கடந்த ஜூலை 20ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிபதி திலகம், உரிய வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூர்த்தி ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். இந்த இரண்டு உத்தரவுகளுக்கு எதிராக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை மேல் முறையீடு எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எல்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்குகள் இன்று முதல் வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது. சொத்து குவிப்பு வழக்குகளில் விடுதலை செய்த நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை தானாக முன்வந்து விசாரிப்பது இது மூன்றாவது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

The post சொத்து குவிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தங்கம் தென்னரசு மீதான வழக்கு: உயர் நீதிமன்றம் இன்று தாமாக விசாரிக்கிறது appeared first on Dinakaran.

Tags : KKSSR ,Gold South ,CHENNAI ,Madras High Court ,Ramachandran ,Thangam Tennarasa ,Dinakaran ,
× RELATED சென்னையில் மழை பாதிப்புகள் குறித்து...