×

கார்கில் செல்லும் முன்பு பழங்கால மடம் அமைந்த லமாயுரு சென்றார் ராகுல்: ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

லே: காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தொடர் பைக் பயணமாக கார்கில் செல்லும் வழியில் பழங்கால மடம் அமைந்த லமாயுரு சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 17ம் தேதி அங்கு சென்ற அவர் தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ்காந்தி பிறந்த நாளை கொண்டாட லேயிலிருந்து பாங்காங் ஏரிக்கு பைக்கில் பயணம் செய்தார். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கினார். அதை தொடர்ந்து நுப்ரா பள்ளத்தாக்கிலிருந்து திரும்பிய அவர், உலகின் மிக உயரமான 18,380 அடி உயரத்தில் அமைந்துள்ள சாலையான கர்துங்லாவில் புகைப்படம் எடுத்தார்.

பின்னர் அவர் கார்கில் நோக்கி பைக்கில் புறப்பட்டார். லேயில் இருந்து அவர் புறப்பட்ட போது பிரதான சந்தையில் பொதுமக்கள் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர். மேலும் செல்பி எடுத்துக்கொண்டனர். மக்கள் வெள்ளத்தில் ராகுல் நடந்து சென்றார். மேலும் ராணுவ வீரர்களும் அவரை ஆர்வமுடன் சந்தித்தனர். அப்போது ராகுல் மூவர்ண கொடியை கையில் ஏந்தியபடி உற்சாகமாக அவர்களுடன் பேசி மகிழ்ந்தார்.

பின்னர் காந்த மலை பகுதியில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார். அப்போது பழங்கால மடம் அமைந்துள்ள லமாயுருவை அவர் நேற்று அடைந்தார். அங்கு இரவு தங்கும் அவர் இன்று காலை கார்கில் நோக்கி பைக்கில் பயணம் தொடங்க உள்ளார். இன்று அவர் கார்கில் மாவட்ட தாலுகாவில் உள்ள ஜான்ஸ்கார் செல்வார். அங்கிருந்து நாளை கார்கில் சென்றடைவார்.

*எந்த சக்தியாலும் அடக்க முடியாது
ராகுல் தனது பயணம் குறித்த படங்களை டிவிட்டில் பதிவிட்டு,’இந்திய ஒற்றுமை யாத்திரை ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் மனதிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. லே நகரின் தெருக்களில் எதிரொலிக்கும் ‘பாரத் மாதா கி ஜே’ என்ற கோஷம் இந்த ஒற்றுமைக்கு வலுவான உதாரணம். பாசமும் தோழமையும் நிறைந்த இந்தக் குரலை எந்த சக்தியாலும் அடக்க முடியாது. சாலையோரத்தில் இருந்த சில பழ வியாபாரிகளிடம் பேசினேன். பண வீக்கம் குறித்து உணர்ந்து கொண்டேன்’ என்று டிவிட்டில் பதிவிட்டுள்ளார்.

The post கார்கில் செல்லும் முன்பு பழங்கால மடம் அமைந்த லமாயுரு சென்றார் ராகுல்: ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Kargil ,Rahul ,Lamayuru ,Congress ,Rahul Gandhi ,
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...