×

ஒன்றிய பாஜ அரசு மோடியின் இமேஜை காப்பதில் தான் கவனம் செலுத்துகிறது: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசு மோடியின் புகழை காப்பாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் சைவ உணவின் விலை 28% உயர்ந்துள்ளதாகவும், தொடர்ந்து 3 மாதங்களாக உணவின் விலை உயர்ந்துள்ளதற்கு காரணம் காய்கறிகளின் விலை உயர்வு என ஊடகங்களில் செய்தி வௌியானது. இதனை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது, “மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் ஒருபுறம் பணவீக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. மறுபுறம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள் குறைந்த விலைக்கு தானியங்களை விற்க வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால் விளைபொருட்கள் முதலாளிகளின் கிடங்குகளுக்கு சென்றவுடன் திடீரென்று அதன் விலை உயர்ந்து விடுகிறது. வெங்காயம் மீதான ஏற்றுமதி 40% உயர்த்தப்பட்டதால் ஆசியாவின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதி சந்தையான நாசிக்கில் வெங்காய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

அரிசி, பருப்பு, மாவு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி சமையலறை செலவு ரூ.100 ஆகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை பற்றி கவலைப்படாத ஒன்றிய பாஜ அரசு, மோடியின் புகழை கட்டி காப்பதிலும், பெருநிறுவன முதலாளிகளுக்கு நன்மை செய்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இதனை மக்கள் இப்போது நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

The post ஒன்றிய பாஜ அரசு மோடியின் இமேஜை காப்பதில் தான் கவனம் செலுத்துகிறது: காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union BJP govt ,Modi ,Congress ,New Delhi ,Union BJP government ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…