×

இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்; நாகை மீனவர்கள் மீது கத்தி, கம்பி தூண்டிலால் தாக்குதல்; 8பேர் காயம்: மீன்கள், செல்போன், வலைகளை பறித்தனர்

வேதாரண்யம்: நாகை மீனவர்களை கடுமையாக தாக்கி மீன்கள், உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுக்காட்டுத்துறையில் இருந்து கடந்த 21ம் தேதி காலை 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ஆறுக்காட்டுத்துறையில் இருந்து கடலில் 22 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் 50 படகுகளில் மீனவர்கள் அருகருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் அந்த பகுதிக்கு 5 பைபர் படகுகளில் 15க்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர். அவர்கள் நாகை மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டினர்.

பின்னர் படகுகளில் ஏறிய கடற்கொள்ளையர்கள் கத்தி, இரும்புக் கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் மீனவர்கள் மீது தூண்டில் முள்ளை போட்டு இழுத்து காயப்படுத்தினர். இதையடுத்து 6 படகுகளில் இருந்த வலைகள், பிடித்து வைத்திருந்த மீன்கள், வாக்கி டாக்கி, திசைகாட்டும் கருவி, பேட்டரி, டார்ச்லைட், செல்போன் மற்றும் ஒரு மீனவர் அணிந்திருந்த வெள்ளி அரைஞாண்கயிறு ஆகியவற்றை பறித்தனர். பின்னர் மீனவர்களை விரட்டியடித்து விட்டு கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற மீன்பிடி உபகரணங்கள், மீன்கள் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும்.

கொள்ளையர்கள் தாக்கியதில் பாஸ்கர் என்ற மீனவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.மேலும் அருள்ராஜ், அருள்வேலவன், சுப்பிரமணி, வெற்றிவேல், செந்தில், மருது, வினோத் ஆகிய 7 மீனவர்களும் காயமடைந்தனர். இது குறித்து மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார், மீனவ பஞ்சாயத்தாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காயமடைந்த மீனவர்களை அழைத்து கொண்டு 6 படகுகளில் மீனவர்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஆறுகாட்டுத்துறைக்கு வந்தனர். காயமடைந்த 8 மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் பாஸ்கர் அருள்ராஜ், அருள்வேலவன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

பாஸ்கருக்கு தலையில் 21 தையல் போடப்பட்டுள்ளது. தகவலறிந்து ஆறுக்காட்டுத்துறைக்கு வந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிந்து மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள் யார், இலங்கையை சேர்ந்தவர்களா, நமது கடல் எல்லைக்குள் எப்படி ஊடுருவினார்கள் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி நேற்று மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

The post இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்; நாகை மீனவர்கள் மீது கத்தி, கம்பி தூண்டிலால் தாக்குதல்; 8பேர் காயம்: மீன்கள், செல்போன், வலைகளை பறித்தனர் appeared first on Dinakaran.

Tags : Atakasam ,Nagai district ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...