×

டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களை நியமிக்கும் அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்பினார் ஆளுநர்: மாநில அரசின் பொதுப்பாடத் திட்டத்துக்கும் முட்டுக்கட்டை

* மோதல் போக்கை தொடருவதால் பரபரப்பு

சென்னை: டிஎன்பிஎஸ்சி தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், மாநில அரசின் பொதுப் பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் அமல்படுத்த தேவையில்லை என்றும் கவர்னர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுடன் அவர் மோதல் போக்கை தொடர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அதாவது, உயர் பதவிகளான குரூப் 1 தேர்வு முதல் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர்(விஏஒ) உள்ளிட்ட தமிழக அரசு துறைகளில் காலியாகும் பணியிடங்களை எழுத்து தேர்வு மூலம் உடனுக்குடன் நிரப்பி வருகிறது.

அப்படிப்பட்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு அமைப்பாகும். அனைவரும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு தமிழ்நாடு ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாளராகவும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தான் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்குவார்கள். அப்படிப்பட்ட டிஎன்பிஎஸ்சியின் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கா.பாலச்சந்திரன் கடந்த 13.4.2020 முதல் பதவியில் இருந்து வந்தார். மேலும் உறுப்பினர்களாக முன்னாள் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ச.முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் க.அருள்மதி, அருட்பணி ம.ஆரோக்கியராஜ் ஆகிய 4 பேர் இருந்து வந்தனர்.

இதில் டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்து வந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான கா.பாலச்சந்திரனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதியுடன் முடிவடைந்தது. இதை தொடர்ந்து உறுப்பினராக இருந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ச.முனியநாதன் டிஎன்பிஎஸ்சியின் பொறுப்பு தலைவராக கடந்த ஆண்டு ஜூன் 10ம் தேதி பதவியேற்றார். தொடர்ந்து அவர் பொறுப்பு தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் காலியாக உள்ள டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு இறங்கியது. இதை தொடர்ந்து புதிய தலைவர் மற்றும் 10 உறுப்பினர்களை தேர்வு செய்து ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கோப்புகளை அரசு அனுப்பி வைத்தது.

அதில் டிஎன்பிஎஸ்சி தலைவராக கடந்த ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசு அனுப்பிய தலைவர், உறுப்பினர்களுக்கான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஒரு மாதமாக கோப்புகளை கிடப்பில் போட்டு வைத்து இருந்தார். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன ஆவணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். தலைவர் நியமனம் தொடர்பாக சில கேள்விகளையும் ஆளுநர் கேட்டு உள்ளார். தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க பொது வெளியில் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்பட்டதா, பெறப்பட்ட விண்ணப்பங்களின் விவரம், இந்த நியமனத்தில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டதா, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரம் உள்ளிட்ட கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.

வழக்கமாக தமிழ்நாடு அரசு முறைப்படி தேர்வு செய்து அனுப்பும் பைல்களுக்கு கையெழுத்து போட்டு அனுப்புவதுதான் ஆளுநரின் பணி என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். எந்த கோப்புகளுக்கும் அவர் கையெழுத்து போட்டு அனுப்புவது இல்லை. கிடப்பில் போடுவது, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி திருப்பி அனுப்புவது என்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய 18க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை அப்படியே ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.

அதில் குறிப்பாக கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைப்பது, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட முக்கிய கோப்புகளை கையெழுத்து போடாமல் ஆளுநர் ஆர்.ஆர்.ரவி நிறுத்தி வைத்துள்ளார். இதில் நீட் விலக்கு பிரச்னையில் மாணவர்களிடம் கொந்தளிப்பான சூழ்நிலை உருவானதை தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் அரசு தயாரித்த உரையை படிக்காமல் அவர் சில வாக்கியங்களை சேர்த்ததால் அதை நீக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால், சட்டப்பேரவையில் தமிழக அரசு தயாரித்த அறிக்கை மட்டுமே ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சட்டப்பேரவை கூட்டத்தின்போது பாதியிலேயே அவர் வெளியேறினார்.

அதேபோல, அமைச்சர் செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு அனுப்பிய பைல்களை ஏற்க மறுத்தார். இதனால் தமிழக அரசே, தனியாக ஒரு அரசாணை பிறப்பித்தது. பின்னர் திடீரென அமைச்சர் செந்தில்பாலாஜியை ஏற்க முடியாது என்று கூறி அவரை டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்தார். பின்னர் நள்ளிரவில் அதை வாபஸ் வாங்கினார். கல்லூரிகள் விவகாரம், மதம் தொடர்பாகவும் அவர் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத சில கருத்துகளை கூறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனாலும் அரசின் கருத்துக்கு எதிராக தொடர்ந்து அவர் பேசி வருகிறார். இவ்வாறு தொடர்ந்து தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக தான் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கான கோப்புகளில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல், அரசு அனுப்பிய டிஎன்பிஎஸ்சி தலைவர் கோப்பை ஒரு மாதமாக கிடப்பில் போட்டு விட்டு திருப்பி அனுப்பியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாடத்திட்டத்துக்கு எதிர்ப்பு: இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாநில அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறையானது கலை, அறிவியல் கல்லூரிகள் அனைத்து பொது பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று வலிந்து நிர்ப்பந்திப்பது தொடர்பாக பல்வேறு கல்வியாளர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள், தன்னாட்சிக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தினர் தங்கள் கவலையை எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர். மாநில அரசின் பொது பாடத்திட்டம் கொண்டு வரப்படும்போது கல்விச் சுதந்திரம் பாதிக்கப்படும். இது கல்வியின் தரத்தைக் குறைக்கும்.

தேசிய அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறுவதும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், அகில இந்திய அளவில் ஆரோக்கியமான போட்டிச் சூழலுடன், கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் இடம் பெறுவதையும் இது பாதிக்கும். இதுபோன்ற நியாயமான கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் கல்வி என்பது மாநில அரசின் வரம்புக்கு அப்பாற்பட்டு ஒன்றிய அரசின் பொதுப்பட்டியலில் உள்ளது. அதாவது, கல்லூரிகளின் பாடத்திட்டத்தைக் கண்காணிக்கும் அமைப்பாக பல்கலைக்கழக மானியக் குழுவே உள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு ஆளுமைக்கு உட்பட்டே பாடத் திட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன.

குறித்த கால இடைவெளியில் பாடத் திட்டங்கள் தொடர்பாக கல்வி கவுன்சில் மற்றும் நிர்வாக கவுன்சில் ஒப்புதல் பெற்று முடிவெடுக்கும் அதிகாரம் படைத்ததாக யு.ஜி.சி.யே உள்ளது. எனவே, தமிழக அரசின் பொது பாடத்திட்டம் என்பது எந்த யு.ஜி.சி.யின் வரம்புக்குட்பட்டது இல்லை. எனவே, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டத்திலேயே பாடங்களை நடத்தலாம். தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை கொண்டு வரும் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து இதுபோல் மோதல் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கடைப்பிடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன ஆவணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.

* வழக்கமாக தமிழக அரசு முறைப்படி தேர்வு செய்து அனுப்பும் பைல்களுக்கு கையெழுத்து போட்டு அனுப்புவதுதான் ஆளுநரின் பணி.

* தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

The post டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களை நியமிக்கும் அரசின் பரிந்துரையை திருப்பி அனுப்பினார் ஆளுநர்: மாநில அரசின் பொதுப்பாடத் திட்டத்துக்கும் முட்டுக்கட்டை appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Chennai ,DGP ,Shailendra Babu ,
× RELATED உதவி வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்...