×

அனைத்து செயல்பாடுகளும் சரியாக இருப்பதால் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கும்: இஸ்ரோ அதிகாரிகள் தகவல்

சென்னை: நிலவின் தென்துருவத்தினை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், திட்டமிட்டபடி இன்று மாலை 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜூலை 14ம் தேதி நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய, எல்.வி.எம் ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலமாக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. அதனை தொடர்ந்து புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. இதை தொடர்ந்து விண்கலத்தை சுற்றுவட்ட பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு ஆக.5ம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது.

இதனையடுத்து, மீண்டும் படிப்படியாக 4 முறை நிலவின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் – 3 விண்கலத்தின் பாதை குறைக்கப்பட்டு விக்ரம் லேண்டரை பிரிக்கும் பணிகள் கடந்த ஆக. 17ம் தேதி மேற்கொள்ளப்பட்டன. மேலும், உந்து விசைகலன் நிலவின், சுற்றுவட்ட பாதையில் தனித்து நிலவை சுற்றி வந்து புவியை ஆய்வு செய்யும் என இஸ்ரோ தெரிவித்திருந்தது. அதன்படி, உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், தொடர்ந்து நிலவை சுற்றி வர ஆக.18 முதல் 20ம் தேதிகளில் டி-பூஸ்டிங் முறையில் மேலும் லேண்டரின் பாதை குறைக்கப்பட்டு நிலவிற்கு அருகில் கொண்டு செல்லப்பட்டது. இதன் பிறகு தான், நிலவின் முதல் படத்தினை விக்ரம் லேண்டர் இஸ்ரோவிற்கு அனுப்பி வைத்தது.

லேண்டர் இமேஜர் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அதை தொடர்ந்து நிலவுக்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி லேண்டரில் உள்ள 4வது கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ நேற்று வெளியிட்டது. விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா நிலவின் மேற்பரப்பை மிக துல்லியமாக படம்பிடித்து அனுப்பியுள்ளது. விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரை இறங்க உள்ள நிலையில் லேண்டரின் அடுத்தடுத்த நகர்வுகளை இஸ்ரோ பதிவு செய்து வருகிறது. அந்தவகையில் சந்திரயான் -3 விண்கலம் திட்டமிட்ட படி இன்று மாலை 6.04 மணிக்கு நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்திருந்தது.

இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: விக்ரம் லேண்டரை திட்டமிட்டபடி தரையிறக்கும் பணி நடைபெறும். விண்கலம் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. விண்கலம் சீராக பயணிக்கிறது. இந்த நிகழ்வு, இஸ்ரோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://isro.gov.in என்ற தளத்திலும், இஸ்ரோ நிறுவனத்தின் யூடியூப் பக்கத்திலும், இஸ்ரோ நிறுவனத்தின் பேஸ்புக் பக்கத்திலும் இன்று மாலை 5.20 மணி முதல் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அனைத்து செயல்பாடுகளும் சரியாக இருப்பதால் விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கும்: இஸ்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chennai ,Dinakaran ,
× RELATED மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில்...