×

வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு 384வதுபிறந்த தினம்: கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது

சென்னை: ‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ என்ற வாசகத்தை ஆங்காங்கே கேள்விபட்டிருப்போம். அப்படி தன்னிடம் வருபவர்களையெல்லாம் வாரி அணைத்து, வாழ வைக்கும் இடம் சென்னை மட்டுமே. ஆண்டுதோறும் ஆக.,22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று 384வது சென்னை தினம் கொண்டாடப்பட்டது. சென்னைக்கு போகலாம்… எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம்… என்ற பேச்சு வெளியூர்களில் இருந்து பையை தூக்கிக் கொண்டு புறப்படும் மக்களிடம் தற்போது வரையும் உள்ளது. தமிழர்கள் மட்டும் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என பல்வேறு காரணங்களுக்காக சென்னையை நோக்கி படையெடுக்கும் பிற மாநிலத்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பல்வேறு கலாசார பெருமைகள், பழமையான நகரம். என பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கிறது ‘நம்ம சென்னை’. காதலர்களுக்கு மெரினா, காய்கறி வாங்க கோயம்பேடு மார்கெட், கிரிக்கெட்டுக்கு சேப்பாக்கம், கோயில்கள் என்றால் மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி என்பார்கள். சென்னைவாசிகளுக்கு மட்டுமன்றி, பிழைப்பு தேடி சென்னை வந்தவர்களுக்கு ‘சென்னை’ என்பது ஒரு ஊரின் பெயராக இல்லாமல் அவர்களின் உணர்விலும் வாழ்விலும் கலந்து விட்டது. முதலில் சென்னைப்பட்டினம், மெட்ராஸ்பட்டினம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு, தற்போது சென்னை என்ற பெயரைப் பெற்று இருக்கிறது. முதன் முதலில் சென்னை தினக் கொண்டாட்டங்கள் 2004ம் ஆண்டு சென்னை ஹெரிடேஜ் பேசிஸ் என்ற அமைப்பால் கொண்டாடப்பட்டது.

அதன் பின்பு, பத்திரிகையாளர்களான சசி நாயர், வின்சன்ட் டி சொஸா, முத்தையா ஆகிய மூவரும் இணைந்த உருவாக்கியதே இந்த சென்னை தினம். முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளை படங்களுடன் 2004ம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. 1639ம் ஆண்டு இதே நாளில் தான் (ஆகஸ்ட் 22), பிரிட்டிஷ் நிர்வாகியான பிரான்சிஸ் டே, தனது மேலதிகாரியான ஆண்ட்ரூ கோகனுடன் சேர்ந்து, விஜயநகரப் பேரரசுடன் இன்றைய சென்னையாக இருக்கும் நிலத்தை கையகப்படுத்த ஒப்பந்தம் செய்தார். அது மெட்ராஸாக மாறியது. இன்று தமிழ்நாட்டின் தலைநகராக சென்னை மிளிர்கிறது.

மிளகு விற்பனையில் கொடிகட்டி பறந்த டச்சுக்காரர்களுக்கு எதிராக பிரிட்டிஷார், தங்களின் வர்த்தக மற்றும் குடியிருப்பு நோக்கங்களுக்காக வாங்கிய நிலம் சென்னை பட்டணம் என்று கையெழுத்தானது. 384 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பட்டணமாக இருந்து தற்போது நாட்டின் மெட்ரோ நகரங்களில் ஒன்றாக மாறி உள்ளது. சென்னை. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியே குடியிருப்புகள் வளர்ந்தன. பின்னர் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. பின்னர், பழைய மற்றும் புதிய நகரங்கள் இணைக்கப்பட்டன. இது தற்போது நாட்டின் முக்கியமான பெருநகராக மாறி உள்ளது. இன்று பல்வேறு காரணங்களால் சென்னை உயர்ந்து நிற்கிறது.

கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம், வரலாறு, சுற்றுலா, வாகனத் தொழில்கள், திரைப்படங்கள் போன்றவை சென்னையை முன்னணி நகராக மாற்றி உள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை இன்று தற்போது தமிழ்நாட்டின் தலைமை செயலகமாக விளங்குகிறது. சென்னை உயர் நீதிமன்றம், தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமான ராயபுரம் ரயில் நிலையம், ராஜிவ்காந்தி மருத்துவமனை விக்டோரியா மஹால், ரிப்பன் மாளிகை, ராஜாஜி அரங்கம் என சென்னையின் அடையாளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.  இந்தியாவின் மிக நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை, டைடல் ஐடி பார்க், நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முனையமான கோயம்பேடு பேருந்து நிலையம், பிரபலமான வழிபாட்டு தலங்கள், கன்னிமாரா நூலகம், கலங்கரை விளக்கம் என சென்னைக்கென தனி அடையாளங்கள் உள்ளன.

சென்னை தினத்தன்று பலவிதமான போட்டிகள், பண்பாட்டு நடை பயணம், கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள், ஓவியக் கண்காட்சிகள், இருசக்கர வாகன பயணங்கள், வினாடி வினா நிகழ்ச்சிகள் மற்றும் உணவுத் திருவிழாக்கள் என ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், சென்னை தின் கொண்டாட்டத்தை ஒரு வாரம் முழுவதும் சென்னை தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

புகைப்பட கண்காட்சியை முதல்வர் திறந்தார்
சென்னை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ‘அக்கம் பக்கம்’ என்கிற தலைப்பில் நடைபெறும் கண்காட்சியில் இடம்பெறும் புகைப்படங்கள் சென்னை பள்ளி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு புகைப்படமும் மாணவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்ணோட்டங்களாக அமைந்துள்ளன. பள்ளி வளாகங்களுக்குள் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில் சூரிய ஒளியால் நனைக்கப்பட்ட தாழ்வாரங்கள், பூனைகள் மற்றும் காகங்கள், வண்ணங்களை தெளிக்கும் மிதிவண்டிகள் மற்றும் பள்ளிப் பைகள்,

விளையாட்டுக்கள் நிறைந்த பொழுதுபோக்குகளில் கண்ணிமைக்கும் நொடியில ஊஞ்சலாடும் சில கணங்கள், பாட வகுப்புகளுக்கு இடையே ஒளிந்திருக்கும சிரிப்புகளும், அக்கறைகளும் நிறைந்த காட்சிகள் ஓவியங்களாக தீட்டப்பட்டு, ‘அக்கம் பக்கம்’ என்ற புகைப்பட கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் வைக்கப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி, அவர்களை பாராட்டினார்.

பன்முகதன்மையின் சமத்துவ சங்கமம்
384வது சென்னை தினம் நேற்று கொண்டாடப்பட்டது இதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: பேரறிஞர் அண்ணா தமிழ் நிலத்துக்கு, தமிழ்நாடெனப் பெயர் சூட்டினார். தமிழினத் தலைவர் கலைஞர் தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை எனப் பெயர் மாற்றினார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வியலோடு பிணைந்துவிட்ட சொல் என்பதா – ஊர் என்பதா – உயிர் என்பதா சென்னையை. சென்னை – ஒட்டுமொத்த இந்தியாவைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. பன்முகத்தன்மையின் சமத்துவச் சங்கமம். வாழிய வள்ளலார் சொன்ன தருமமிகு சென்னை.

The post வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு 384வதுபிறந்த தினம்: கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vandar ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...