×

மீன்குழம்பு, நண்டு ரசத்துடன் அன்லிமிட் சாப்பாடு! கடலைப் பார்த்து ரசித்து ருசிக்கலாம்

சாந்தோம் தேவாலயம், பல அழகிய கட்டிடங்கள் என ஒரு கலவையான பின்னணியில் அழகாக காட்சியளிக்கும் பட்டினப்பாக்கம் கடற்கரை சென்னையில் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு அலையடிக்கும் கடலைப் பார்த்தவாறு மீன்குழம்பு, நண்டு ரசம், சாம்பார், பொரியல் என 60 ரூபாய்க்கு அன்லிமிட் உணவை வழங்கி வருகிறது நெய்தல் உணவகம். பெயின்டர், ஆட்டோ ஓட்டுநர், சமையல் வேலை என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டு, தற்போது இந்த உணவகத்திற்கு உரிமையாளர்களாக மாறி உள்ள காதல் தம்பதிகளான ஜான்சன், சுமதியைச் சந்தித்துப் பேசினோம். “நானும், எனது மனைவி சுமதியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான். பெயின்டிங் ஒர்க், ஆட்டோ ஓட்டுநர், வீட்டு வேலைன்னு பல தொழில் செய்த நாங்கள் தற்போது `நம்ம நெய்தல்’ உணவகத்தைத் தொடங்கி இருக்கிறோம். தமிழில் நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த பகுதியைக் குறிக்கும்.

இந்தப் பகுதியில் வாழும் மக்களின் உணவு கடலில் கிடைக்கக்கூடிய மீன், நண்டு, கடம்பா, இறால் போன்ற கடல் உணவுகள்தான். நாங்களும் கடல் உணவுகள் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் நம்ம நெய்தல் உணவகத்தை தொடங்கினோம்” என்று புன்னகையுடன் நம்மிடம் பேசத்துவங்கினார் ஜான்சன். “20 வருடங்களுக்கு முன்பு பட்டினம்பாக்கத்தில் கருவாட்டுச்சோறு, தக்காளி சாதம், தயிர் சாதம், இட்லி, பொங்கல் என்று மனைவி தயார் செய்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் என்று அனைவருக்கும் என் மனைவி சுமதியும், நானும் சாப்பாட்டை தொன்னை இலையில் கட்டி விற்பனை செய்து வந்தோம். சில வருடங்களுக்கு முன்பு எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, குடும்பத்தை நடத்துவதே சிரமமாக இருந்தது. அதனால் சுமதி அருகில் இருந்த அப்பார்ட்மென்ட்டில் உள்ள வீடுகளுக்கு சமையல் வேலைக்கு சென்றார். சுமதியின் உணவினை சாப்பிட்ட அனைவரும் நீங்கள் ஏன் ஒரு உணவகம் தொடங்கக் கூடாது என்று கேட்பார்கள்.

அந்த அளவிற்கு ருசியாக சமையல் செய்வார்.என் மகனின் கல்லூரி நண்பர்களும் அவ்வப்போது வீட்டிற்கு வந்து சாப்பிடுவது வழக்கம். சுமதி செய்யும் மீன்குழம்பும், சுறாபுட்டையும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பிட்டவுடன் அவர்களும் ஏன் உணவகம் தொடங்கக் கூடாது என்றுதான் கேட்பார்கள். அதிலிருந்து வீட்டிலேயே உணவு தயார் செய்து வெளியில் விற்பனை செய்து வந்தோம். ரூ.35க்கு அன்லிமிட்கொடுக்கத் தொடங்கிய நாங்கள் இன்றைக்கு ரூ.60க்கு கொடுத்து வருகிறோம். உணவகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டும் என்று யோசித்த நாங்கள் பக்கத்தில் இருந்த காலிமனையை வாடகைக்கு எடுத்தோம். அதில் வாடிக்கையாளர்கள் கடலை பார்த்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்தோம். அதையே இன்றைக்கு நடைமுறைப் படுத்தியுள்ளோம்’’ என்று பேசி முடித்த ஜான்சனை தொடர்ந்து நம்மிடம் சுமதி பேசத்துவங்கினார்.“ரொம்ப நாள் பட்ட கஷ்டத்துக்கு எங்களுக்கு இன்னைக்கு பலன் கிடைச்சிருக்கு. இப்போ எங்களுக்கான அடையாளத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.

கடலில் கிடைக்கக்கூடிய மீன், நண்டு, இறால், சங்கு கறி என்று அனைத்தையும் என்னுடைய கைகளால் மசாலாவை அரைத்து நானே தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறேன். அவர் அதிகாலை 4 மணிக்கே எழுந்து சென்று காசிமேட்டில் மீன்களை வாங்கி வந்துவிடுவார். நான் காலை 5.30 மணிக்கு மீன்களை சுத்தம் செய்ய தொடங்கி 10 மணிக்கு உணவினை தயார் செய்ய ஆரம்பிப்பேன். மதியம் 12 மணிக்கு தொடங்கும் உணவகம் மாலை 5 மணி வரை செயல்படும். இப்போ ரூ.60க்கு இறால் குழம்பு, மீன் குழம்பு, சாம்பார், ரசம், பொரியல், சாப்பாடு கொடுக்கிறோம். இறால் குழம்புக்கு பதிலாக ஒரு நாளைக்கு நண்டு குழம்பு, இன்னொரு நாளைக்கு கருவாட்டுக் குழம்புன்னு தருகிறோம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். காசிமேடு மார்க்கெட்டில் கிடைக்கும் அன்றைக்கு பிடித்து வந்த மீன்தான் நம்ம நெய்தல் உணவகத்தில் அன்றைய ஸ்பெஷல். இதுமட்டுமில்லாமல் ரூ.50க்கு பிஷ்கறி, ரூ.50க்கு அசாது என்கிற கிரேவியும் கொடுத்து வருகிறோம்.

சீசனைப் பொருத்து ரூ.100க்கு இலிபூச்சியும் கொடுத்துட்டு இருக்கோம். இதுபோக இறால், கடம்பா, சங்கு கறி, அயிலை என்று 36 வெரைட்டி கடல் உணவுகள் நம்ம
நெய்தல் உணவகத்தில் கிடைக்கும். எங்கள் உணவகத்தின் ஸ்பெஷல் ரெசிபின்னா அது சுறாப்புட்டு கட்லட்டுதான். சுறாப்புட்டு செய்யும்போது அதில் குறிப்பிட்ட அளவு வெங்காயம் சேர்ப்போம். நேரம் ஆக ஆக வெங்காயத்தில் இருந்து தண்ணீர் பிரிந்து வரும். இதனால் சுறாபுட்டோட டேஸ்ட்டே மாறிடும். இதை கவனத்தில் வைத்து நானே உருவாக்குன ஸ்பெஷல் டிஸ்தான் சுறா புட்டு கட்லட். உணவகத்திற்கு குடும்பத்தோடு வருபவர்கள் அனைத்து உணவு வகைகளையும் விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா குழந்தைங்க மட்டும் புதுசா ஒரு டிஸ்ஸை சாப்பிடணும்னு எதிர்பார்ப்பாங்க. அதற்காக நாங்க அறிமுகப்படுத்தின டிஷ்தான் ப்ரான் ஸ்டிக்ஸ். இதை குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இலிபூச்சிக்கு எங்கள் உணவகத்தில் அவ்வளவு வரவேற்பு உண்டு. இது ஒருவகை நண்டு இனத்தை சேர்ந்தது. இதை மணல் நண்டு, கடல் எலி என்று கூட பல்வேறு பகுதிகளில் சொல்வார்கள். எத்தனை கிலோ பிடித்து வந்தாலும், சமைத்து வைத்த 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடுகிறது. இது உடலுக்கு மிகவும் நல்லது. அதுபோன்று சங்கு கறிக்கும் எங்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. இந்த சங்குக்கறியும் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. உணவகத்திற்கு சாப்பிட வரும் பலரும் எப்படி கட்டுப்படியாகுது? என்று கேட்கிறார்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ஆனால், உணவின் சுவையைக் கேள்விப்பட்டு மக்கள் வர வர இப்போது வருமானம் ஓரளவு பரவாயில்லை. மேலும், வெளி ஆட்கள் யாரும் இல்லாமல், எங்கள் குடும்பத்தினரே சேர்ந்து நடத்துவதால், எங்களுக்கு, ஓரளவுக்கு லாபமும் கிடைக்கிறது. சமையல் மாஸ்டர், வேலையாட்கள் என்று யாரும் கிடையாது. உணவு தயாரிப்பதில் இருந்து பரிமாறி உணவகத்தை சுத்தம் செய்வது வரை எல்லா வேலைகளையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்” என்கிறார்.

– சுரேந்திரன் ராமமூர்த்தி

இறால் தொக்கு

தேவை

இறால் – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது –
ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லித்தழை –
சிறிதளவு
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

தக்காளி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை தனித்தனியாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், சோம்பு சேர்க்கவும். சோம்பு நன்றாக பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கி, அதனுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். சிறிது நேரத்தில் இறால் வெந்ததும் கரம் மசாலாத்தூள் மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறிய பின் இறக்கினால் சுவையான இறால் தொக்கு தயார்.

The post மீன்குழம்பு, நண்டு ரசத்துடன் அன்லிமிட் சாப்பாடு! கடலைப் பார்த்து ரசித்து ருசிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chanthom Church ,Chennai ,
× RELATED சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை காரணமாக 27 விமானங்கள் தாமதம்..!!