×

குழந்தைகளுக்கு சாக்லேட் பரோட்டா…சைவத்துக்கு வாழை இலை பரோட்டா..!

சென்னையில் மணக்கும் ராம்நாட் குருமா

உழைப்பால் உயர்ந்திருக்கிறார் முகமது அப்துல் அபு. ஓட்டலில் வேலை பார்த்து, தொழில் கற்றுக்கொண்டு, ஒரு சமயத்தில் வேலை பார்த்த ஓட்டலையே விலைக்கு வாங்கி நடத்தி இருக்கிறார். அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து, தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தின் ருசியை சென்னைக்கு கொடுக்கும் வகையில் தனித்துவமான ஓட்டலைத் துவங்கி நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் ராமநாதபுரத்தின் ட்ரேட்மார்க்கான பரோட்டாதான் ஸ்பெஷல் டிஷ். அந்த மாவட்டத்தின் ருசியுடன் மணக்கும் சிக்கன், மட்டன் குருமாவும் இங்கு பேமசாகி வருகிறது. தனது கடைக்கு சிலோன் பரோட்டா என ஒரு சூப்பர் பெயரை சூடியிருக்கிறார். முகமது அப்துல் அபுவை் சந்தித்தோம். தனது ஓட்டல் அனுபவம் குறித்து பேச ஆரம்பித்தார். “நான் பெருசா எதுவும் படிக்கல. பத்தாவது வரைக்கும்தான் படிச்சு இருக்கேன். ராமநாதபுரம்தான் எங்களுக்கு சொந்த ஊரு. அங்க அப்பா ஐதர் அலி ஃபேன்சி ஸ்டோர் வெச்சு நடத்திட்டு வந்தாரு. அப்போ வியாபாரத்துல ஏற்பட்ட பொருளாதார பிரச்னையால அப்பா 20 வருஷத்துக்கு முன்னாடி சென்னைக்கு பொழப்பு தேடி வந்தாரு.

இங்கதான் எங்கள படிக்க வெச்சாரு. சின்ன வயசுல இருந்தே எனக்கு தொழில் தொடங்கணும்னு ஆசை. அதனால சென்னை சைதாப்பேட்டையில் மாமா வெச்சு நடத்திட்டு வந்த உணவகத்துல வேலைக்கு சேர்ந்து தொழில கத்துக்கிட்டேன். தொடர்ந்து நன்மங்கலம் அம்பேத்கர் சாலையில் இருக்குற உணவகத்துல வேலைக்கு சேர்ந்தேன். அப்போ அந்த உணவகத்த விற்பனை செய் யும் எண்ணத்தில இருந்தாரு உரிமையாளர். அந்த கடைய எங்க மாமா கொடுத்த நம்பிக்கையில நானே வாங்கி நடத்த தொடங்குனேன். சிறிது காலம் அங்கேயே உணவகத்தை வைத்து நடத்தி வந்தேன். ராமநாதபுரம் வட்டார உணவு ருசிய சென்னைல கொண்டு வரலாம்னு முடிவு பண்ணேன். அந்த ஜில்லாவுல திரும்புற திசையெல்லாம் பரோட்டாக்கடை இருக்கும். சிலர் அங்கு பரோட்டாவை ரொட்டின்னும் சொல்வாங்க. கடைக்கு கடை பரோட்டா மாறுபடும். அளவுகளில் மட்டுமில்லாமல், சுவையிலும் டிப்ரண்ட் இருக்கும். சில கடைகளில், பொரிக்காத மெது மெதுனு பரோட்டா கிடைக்கும்.

ஒரு கடைல சாப்பிட்டவுங்க அந்த கடையோட ருசி பிடிச்சு இருந்தா அந்த கடைக்கு ரெகுலர் கஸ்டமரா மாறிடுவாங்க. சென்னையில் அதே சுவையில் ஒரு பரோட்டா உணவகத்தை திறக்க முடிவு செய்தேன். அப்படி திறக்கப்பட்டதுதான் இந்த சிலோன் பரோட்டா. மலேசியா, சிலோன்ல எல்லாம் பரோட்டோ ரொம்ப பேமஸ். அதனால உணவகத்துக்கு சிலோன் பரோட்டான்னு பேரு வெச்சோம். கிட்டத்தட்ட 80 வகையான பரோட்டா வெரைட்டிஸ் கொடுத்துட்டு இருக்கோம்.இந்தக் கடை தொடங்கி 1 வருசத்துக்கு மேலாகுது. கோவிலம்பாக்கத்துல 5 வருசத்துக்கு மேல 2 பிராஞ்ச் நடத்திட்டு இருக்கேன். எல்லாமே பரோட்டா சம்பந்தப்பட்ட ரெசிபிகள்தான். பரோட்டாவ பொருத்தவரைக்கும் வட்டமா போடுறத விட சதுரமா போட்டா நல்லா வேகும். அதே சமயம் பரோட்டா ருசியாவும் இருக்கும். சிலோன் பரோட்டாவுல முல்தபா பரோட்டா ரொம்ப ஃபேமஸ். ஏற்கனவே தயார் செஞ்சு வெச்சு இருக்குற மைதா மாவுல மசாலாவ ஸ்டப் பண்ணி அத மிதமான தீயில தோசை கல்லு மேல போட்டு எடுப்போம்.

இப்படி பரோட்டாவை மிதமான தீயில வேக வைக்கிறதால உள்ள இருக்கிற மசாலா எல்லா இடத்துலயும் பரவலா வேகும். இதனால ருசி அட்டகாசமா வரும். அதேபோல கடைக்கு வரவுங்க முதல்ல ஆர்டர் செய்றதுன்னா அது பொரிச்ச பரோட்டாதான். தோசைக்கல்லு மேல ஆவி பறக்க இருக்குற எண்ணெய்ல மைதா மாவ போட்டு பொரிச்சு எடுப்போம். அப்புறமா அதை எடுத்து பரோட்டாவை பொரித்து கொடுப்போம். இதனால், ப்ரோட்டா சும்மா மொறு மொறுவென வரும். இந்த பரோட்டாவை இலையில் பிய்த்து போட்டு அதோடு சால்னாவையோ, பாயாவையோ சேர்த்து வைத்து சாப்பிடும்போது அதன் சுவையே அல்டிமேட்டாக இருக்கும். சால்னாவில் சிக்கன், மட்டன் கொடுக்குறோம். சைவப் பிரியர்களுக்காக வெஜ் குருமாவும் கொடுத்துட்டு இருக்கோம்.சிலோன் பரோட்டாவில் லாப்பா மட்டும் இல்லாம, வாழை இலை பரோட்டா, பன் பரோட்டா, சிக்கன் கொத்து பரோட்டா, சைவ வாழை இலை கிழி பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, சிக்கன் வீச்சு பரோட்டா, காயின் பரோட்டா, குழந்தைகளை ஈர்க்கும் விதமாக சாக்லேட் பரோட்டான்னு பல வெரைட்டி இருக்கு.

எல்லா உணவுகளையுமே ராமநாதபுரம் ஜில்லா ருசியில் கொடுக்குறோம். மதியம் 12 மணிக்கு தொடங்குனா அடுத்த நாள் காலை 4 மணி வரை கடை பரபரப்பா இருக்கும். கடைக்கு வரவுங்க லாப்பாவையும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இதுவும் முல்தப்பா மாதிரிதான் இருக்கும். ஆனா இதுல பரோட்டாவ வேக வெச்சு அதுல மசாலாவ ஸ்டப் செஞ்சு கொடுப்போம். மசாலாவ பொருத்தவரைக்கும் கஸ்டமர்ஸ் விரும்புற அசைவத்த சேர்ப்போம். சிக்கன், மட்டன், மீன், பிரான்னு எல்லா வகை மசாலாவுலயும் முர்த்தப்பாக், லாப்பா கொடுத்துட்டு வரோம். இதோட பிரியாணி, தோசைன்னும் தரோம். சைவம் சாப்பிடுறவங்களுக்கு பனீர் முர்தப்பாக், லாப்பா கொடுக்கிறோம். பொதுவாகவே உணவகத்திற்கு வருபவர்கள் மெயின் டிஸ் சாப்பிடுவதற்கு முன்னாடி ஸ்டார்ட்டர்ஸ் என்ன இருக்குன்னு கேட்பாங்க.

அவுங்களுக்காக பெப்பர் பார்பிக்யூ, தந்தூரி, பிச்சி போட்ட நாட்டுக்கோழி பிரை, மட்டன் சுக்கா, பெப்பர் சிக்கன் ரோஸ்ட்ன்னு கொடுத்துட்டு வரோம். என்னோட மாமா சாஜித்தும், ஜகாங்கிரும்தான் என்ன இன்னைக்கு முதலாளியா மாத்தி இருக்காங்க. உணவகம் தொடங்கலாம்னு வீட்டில் சொன்னதும் என்னை யாருமே நம்பல. ஆனா எங்க மாமாங்க மட்டும் நீ என்ன வேணும்னாலும் பண்ணு, நாங்க உனக்கு துணை இருக்கோம்னு சொன்னாங்க. அந்த நம்பிக்கையிலதான் உணவகத்தைத் தொடங்கினேன். இப்ப நல்லா சக்ஸஸ்புல்லா போயிட்டு இருக்கு. அவங்க கொடுத்த நம்பிக்கை வார்த்தைதான் இன்னைக்கு என்னை ஆதம்பாக்கத்துலயும் இன்னொரு கடை திறக்க வச்சிருக்கு. அதுமட்டுமில்லாம உணவகத்தை நிர்வகிக்கிறதுக்கும் எனக்கு துணையா இருக்காங்க. அப்பாவும் இப்ப எனக்கு ரொம்ப துணையா இருக்காரு. வாடிக்கையாளர்கள் விரும்புற ருசியில உணவு கொடுக்கறது மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார் முகமது அப்துல் அபு.

– சுரேந்திரன் ராமமூர்த்தி.
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி.

முட்டை லாப்பா

தேவையான பொருட்கள்

மைதா மாவு – அரை கிலோ
உப்பு – தேவையானஅளவு
சர்க்கரை – அரை ஸ்பூன்
நெய் – அரை ஸ்பூன்
வெங்காயம் – 5
மிளகு சீரகத்தூள் – சிறிதளவு
தக்காளி – 2
முட்டை – 5.

செய்முறை

சுத்தமான மைதா மாவில் சிறிதளவு சர்க்கரை, அரை ஸ்பூன் நெய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்கவும். அதில் தண்ணீர் விட்டு, தோசை மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து, எண்ணெய் தடவி ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை சப்பாத்திக் கல்லில் வைத்து நன்றாக திரட்டிக்கொள்ளவும். ஒரு பவுலில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியுடன் சிறிதளவு மிளகுத்தூள் அரை ஸ்பூன் மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, அதனுடன் இரண்டு முட்டைகளையும் உடைத்து சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு திரட்டி வைத்துள்ள மாவைக் கல்லில் இட்டு, அதில் கலக்கி வைத்துள்ள வெங்காயம் முட்டை கிரேவியை ஊற்றவும். நான்கு பக்கமும் சிறிதளவும் மடக்கி விட்டு சுற்றி, தேவையான அளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான முட்டை லாபா தயார்.

The post குழந்தைகளுக்கு சாக்லேட் பரோட்டா…சைவத்துக்கு வாழை இலை பரோட்டா..! appeared first on Dinakaran.

Tags : Muhammad Abdul Abu ,Ramnath Guruma ,Chennai ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!