×

பெரியபாளையம் கோயிலில் 1000 ரூபாய் போலி சிறப்பு அனுமதி சீட்டு விற்றவருக்கு போலீஸ் வலை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் கோயில் போலியான அனுமதி சீட்டு விற்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் பிரதான தெய்வமாக பவானி அம்மனே வீற்றிருக்கிறார். வார இறுதி நாட்கள், ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஆயிரக்கணக்கில் அம்மனை தரிசிக்க வருகிறார்கள். மேலும் ஆண்டு முழுவதும், அம்மனின் அருள் வேண்டி பக்தர்கள், தங்கள் குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். குறிப்பாக சென்னை, ஆவடி, திருவள்ளுர் மற்றும் ஊத்துக்கோட்டை பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பெரியபாளையம் கோயிலுக்கு வந்து செல்வார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஒரு குடும்பத்தினர் வந்தனர். அவர்களில் ஒருவர், ரூ.1000 சிறப்பு விரைவு டிக்கெட் வைத்திருந்தார். சிறப்பு நுழைவு வரிசையில் சென்றபோது விரைவு அனுமதி சீட்டை கோயில் செயல் அலுவலர் பிரகாஷ் சோதனை செய்தார்.

அப்போது ரூ.1000 க்கான அனுமதி சீட்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விசாரித்தார். ‘இந்த சீட்டு கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்படவில்லை, போலியானதே.. உங்களுக்கு யார் கொடுத்தது’ என சீட்டு வைத்திருந்த பக்தரிடம் செயல் அலுவலர் கேட்டார். அதற்கு அவர், கோயில் வளாகத்தில் நின்றிருந்த ஒருவரை கைகாட்டினார். உடனே விரைந்து சென்று போலியாக அனுமதி சீட்டு விற்றவரை செயல் அலுவலரும், மற்றொரு ஊழியரான வெங்கடேசன் ஆகியோர் பிடித்து கேட்டனர். அப்போது அந்த நபர், இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றார். இதுகுறித்து செயல் அலுவலர் பிரகாஷ், பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

The post பெரியபாளையம் கோயிலில் 1000 ரூபாய் போலி சிறப்பு அனுமதி சீட்டு விற்றவருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Oothukottai ,Periyapalayam temple ,Bhavani Amman ,
× RELATED பெரியபாளையம் பேருந்து நிலையத்தில்...