
ஊத்துக் கோட்டை: பெரியபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பள்ளி மற்றும் வேலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என மாணவர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஆத்துப்பாக்கம், அரியப்பாக்கம், தண்டலம், தும்பாக்கம், சூளைமேனி ஆகிய பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்த பஸ்கள் செங்குன்றம், கோயம்பேடு, மூலக்கடை ஆகிய பகுதிகளில் உள்ள பணிமனையில் இருந்து இயக்கப்படுகிறது. ஆனால் காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலை நேரத்தில் போதுமான பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிப்படுகின்றனர். அவர்கள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. எப்போது பஸ் வருகிறதோ அந்த நேரத்தில்தான் செல்ல வேண்டியுள்ளது.
அவ்வாறு வரும் பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது. சிலர் பஸ்சின் படிக்கட்டிலும், பஸ்சின் மேற்கூரை மீதும் ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். எனவே பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பஸ் பயணிகளும், மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து நேரக்காப்பாளர் கூறுகையில், ‘சென்னையில் இருந்து பெரியபாளையத்திற்கு 40 மாநகர பஸ்கள் இயக்க வேண்டும். ஆனால் 28 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது’ என்றார். பொதுமக்கள், மாணவர்கள் கூறுகையில், ‘பெரியபாளையத்தில் இருந்து போதிய பஸ்கள் இல்லாததால் ஊத்துக்கோட்டை மற்றும் ஆந்திராவில் இருந்து வரும் பஸ்களில் ஏறி செல்கிறோம் எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்’ என்றனர்.
The post பெரியபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து பள்ளி, வேலை நேரத்தில் கூடுதல் பஸ்கள்: மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.