×

அரசு பள்ளியை தூய்மைப்படுத்திய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள்

திருப்போரூர்: செம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வண்ணம் அடித்தல், தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகளை படூர் இந்துஸ்தான் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டமாணவர்கள் மேற்கொண்டனர். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.என்.ஸ்ரீதாரா தொடங்கி வைத்த 7 நாள் முகாமில் பள்ளி மாணவர்களுக்கிடையே பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. சென்னை இந்துஸ்தான் ரோட்டரி சங்க தலைவர் பொன்.ராமலிங்கம், செம்பாக்கம் ஊராட்சி தலைவர் சரவணன் ஆகியோர் பரிசு வழங்கினர். மேலும் சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில், கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு 12 பேருக்கு இலவச கண்ணாடி வழங்கப்பட்டு, 15 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் பல் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது. செம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் 77 வகையான பழ மரக்கன்றுகள் நடப்பட்டன.

செம்பாக்கம் கிராம இளைஞர்களுக்கிடையே கைப்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து, திருப்போரூர் பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதி குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. திருப்போரூர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்திற்கு 5 கரும்பலகைகள் வழங்கப்பட்டன. முகாமில், பல்கலைக்கழக இணை துணைவேந்தர் அலெக்சாண்டர் ஜேசுதாசன், பல்கலைக்கழக டீன் ஏஞ்சலின் கீதா உட்பட பலர் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை இந்துஸ்தான் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன் செய்திருந்தார்.

The post அரசு பள்ளியை தூய்மைப்படுத்திய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,National Welfare ,Badur Hindustan University ,Sembakkam Government High School ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ