×

வி.ஐ.டி. பல்கலை பட்டமளிப்பு விழாவில் 2,961 மாணவர்களுக்கு பட்டம்: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் வழங்கினார்

சென்னை: வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் விசுவநாதன் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் சந்தியா பென்டா ரெட்டி மற்றும் உதவி துணைத்தலைவர் காதம்பரி விசுவநாதன் முன்னிலை வகித்தனர். வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ராம்பாபு கோடாலி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் கலந்துகொண்டு 33 மாணவ, மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் உள்பட 2,961 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது: வி.ஐ.டி நிறுவனம் ஆராய்ச்சியில் முன்னிலை நிறுவனமாக திகழ்ந்து 58 ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியதன் பலனாக உலகளாவிய தரவுத்தளங்கள் போன்றவற்றின் சிறந்த இதழ்களின் ஆய்வுக் கட்டுரைகள், ஆராய்ச்சி காப்புரிமைகள் மற்றும் கல்வி சகோதரத்துவத்தை இணைக்கும் சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டு உள்ளனர். வி.ஐ.டி.யிலுள்ள மாறுபட்ட கலாச்சார சூழலின் வெளிப்பாட்டால் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களும் பயில்கின்றனர் என்பது பெருமிதம் வாய்ந்த ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் விசுவநாதன் பேசியதாவது: கல்வி மேம்பாட்டுக்காக ஒன்றிய, மாநில அரசுகள் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நாடு முழுவதும் 20 லட்சம் மாணவர்கள் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர். ஆனால், 1 லட்சம் இடங்கள் மட்டும் தான் உள்ளது. தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர். ஆனால், 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் தான் உள்ளது. அதனால் தான் மாணவர்கள் சீனா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு படிக்க செல்கின்றனர்.

தேசிய மருத்துவ ஆணையம் ஒவ்வொரு மருத்துவ கல்லூரிக்கும் 150 முதல் 220 இடங்களுக்கு அனுமதி அளிக்கிறது. ஆனால், சீனா உள்பட பல நாடுகளில் 400 முதல் 600 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதேபோல், அனுமதி அளித்தால் 1 லட்சம் என்ற மருத்துவ இடங்கள் 3 லட்சம் எண்ணிக்கையாக உயரும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் கவுரவ விருந்தினராக வால்மார்ட் குளோபல் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் (இந்தியா) பாலு சதுர்வேதுலா கலந்துகொண்டனர்.

The post வி.ஐ.டி. பல்கலை பட்டமளிப்பு விழாவில் 2,961 மாணவர்களுக்கு பட்டம்: நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Nagaland ,Governor L. Ganesan ,Chennai ,VIT University ,VIT ,Governor ,L. Ganesan ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...