×

திருமங்கலம் அருகே 17ம் நூற்றாண்டின் நடுகல் வீரன் சிற்பம்

திருமங்கலம் : திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் இருந்து புளியங்குடி செல்லும் வழியில் பழமையான சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து, இக்கிராமத்தை சேர்ந்த அரிச்சந்திரன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் ஸ்ரீதர், வரலாற்றுதுறை பேராசிரியர் தாமரைக்கண்ணன் ஆகியோர் சாத்தங்குடி சென்றனர்.

அவர்கள் நடத்திய களஆய்வில், அந்த சிற்பம் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாயக்கர் காலத்தை சேர்ந்தது என தெரியவந்தது. இதுகுறித்து களஆய்வாளர்கள் கூறியதாவது: கணவன் போரில் அல்லது வீரச்செயலில் உயிரிழந்தால், மனைவி கணவனுடன் சிதையில் விழுந்து உயிர்துறப்பது சதி என அழைக்கப்படுகிறது.தற்போது கண்டறிந்த சிற்பமும் சதி நடுகல் வகையை சேர்ந்தது. இது இரண்டரை அடி உயரமும், மூன்றடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

நடுவில் ஒரு வீரன், இடதுபுறம் சரிந்த கொண்டையுடனும், மார்பில் ஆபரணம், கைகளில் வளையல், காப்பும் இடம் பெற்றுள்ளது. கால்களில் வீரக்கழலை அணிந்தவாறு சிற்பம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் வீரனின் இருபுறமும் அவரது மனைவிகள் சிற்பம் காணப்படுகிறது. மூன்று உருவங்களிலும் காதுகள் நீண்டதாக சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
இம்மூவரும் கைகளில் மலர் செண்டு வைத்துள்ளதாக இருக்கிறது.

வீரனின் இடது கை இடது தொடையை பிடித்தபடி சிற்பம் நேர்த்தியாக சுஹாசனக்கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளது. இந்த வீரனின் இறப்பு தாளாமல் அவரது மனைவியர் இருவரும் உடன்கட்டை ஏறியுள்ளனர். இதன் நினைவாக மூவருக்கும் நடுகல் எடுத்துவழிபட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post திருமங்கலம் அருகே 17ம் நூற்றாண்டின் நடுகல் வீரன் சிற்பம் appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Thirumangalam ,Sathangudi ,Puliyangudi ,
× RELATED திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை...