×
Saravana Stores

லிப்ட் வசதிக்காக வெட்டப்பட்ட 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த 18 மாத ஆண் குழந்தை பலி

*திருப்பதி அருகே சோகம்

திருப்பதி : திருப்பதி அருகே லிப்ட் வசதிக்காக வெட்டப்பட்ட 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த 18 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.திருப்பதி ரூரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரிபுரம் காலனியில் தனியார் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. அந்த கட்டிடத்தின் பயன்பாட்டிற்காக லிப்ட் வசதி அமைக்க பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. கட்டிட பணிக்காக மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. அப்போது மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 18 மாத ஆண் குழந்தை அபி விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாத லிப்ட் வசதிக்காக வெட்டப்பட்ட 10 அடி பள்ளத்தில் குழந்தை அபி தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. தண்ணீர் நிரம்பி இருந்ததால் குழந்தை விழுந்தது அங்கிருந்த தொழிலாளர்களுக்கு தெரியவில்லையாம்.

பின்னர், குழந்தை காணாததை அறிந்த பெற்றோர் மற்றும் சக தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து குழந்தை அபியை தேடியுள்ளனர். பின்னர், சந்தேகத்தின் பேரில் லிப்ட் வசதிக்காக வெட்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி பார்த்துள்ளனர். அதில், குழந்தை அபி தண்ணீரில் ழுழ்கிய நிலையில் இருந்ததை கண்ட பெற்றோர்கள் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை அபி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post லிப்ட் வசதிக்காக வெட்டப்பட்ட 10 அடி பள்ளத்தில் தவறி விழுந்த 18 மாத ஆண் குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Sadam Tirupati ,Tirupati ,
× RELATED திருமலை விஐபி தரிசன டிக்கெட் விவகாரம்...