×

தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் விதமாக தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அத்தொழிலாளர்கள் சந்தித்து நன்றி!

சென்னை: உணவு விநியோகம் மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் விதமாக தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அத்தொழிலாளர்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (22.8.2023) தலைமைச் செயலகத்தில், இணைய வழி சேவை நிறுவனங்களின் வாயிலாக உணவு விநியோகம் மற்றும் சேவைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களான கிக் (Gig) தொழிலாளர்கள் சந்தித்து, சுதந்திர தின விழா உரையில், தங்களது நலனை பாதுகாக்கும் விதமாக தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.8.2023 அன்று சுதந்திர தின விழா உரையில், “சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, பல்வேறு நகரங்களிலும் இன்று நாம் அடிக்கடி காணக்கூடிய காட்சி ஒன்று. ஓலா, ஊபர், ஸ்விகி, ஸொமட்டோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வாகனங்கள் விரைவாக சேவை வழங்கும் நோக்கத்துடன் பயணிப்பதைக் காணலாம். நேரத்தின் அருமை கருதி பணிபுரியும் இத்தகைய பணியாளர்களின் வாழ்க்கை முக்கியமானது. அவர்களின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென தனியே நல வாரியம் ஒன்று அமைக்கப்படும்” என்று அறிவித்தார். அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக கல்வி. திருமணம், மகப்பேறு, கண் கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம், விபத்து ஊனம், ஈமச்சடங்கு போன்ற பல்வேறு நல உதவிகளை 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் வாயிலாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகின்றது.

இவ்வரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து 31.07.2023 வரை. அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 14,29,502 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டு, 12,52,978 பயனாளிகளுக்கு 989.10 கோடி ரூபாய் நலத்திட்ட உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தமிழ்நாடு அமைப்புசாரா ஒட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்குவதற்காக ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது.

தற்போது தொழில்முறை டாக்ஸி வாகனம் வாங்குவதற்கும் இத்திட்டத்தின் கீழ் மாற்று பாலினத்தவரான திருநங்கைகள் பயன்பெறவும் இத்திட்டத்தினை விரிவுபடுத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், இணைய வழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் உணவு விநியோகம் மற்றும் சேவைப் தொழிலாளர்களான கிக் (Gig) பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலனை பாதுகாக்கும் வகையில் தனியே நல வாரியம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தமைக்காக, ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமாட்டோ, டன்ஸோ, ஸெப்டோ போன்ற இணைய வழி சேவை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இன்று சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

 

The post தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் விதமாக தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை அத்தொழிலாளர்கள் சந்தித்து நன்றி! appeared first on Dinakaran.

Tags : Chief Minister of ,Tamil Nadu ,G.K. ,stalin ,Chennai ,GIG ,Tamil ,Nadu ,
× RELATED புதுச்சேரி முதலமைச்சராக 4ம் ஆண்டு...