×

கலை பண்பாட்டு துறை சார்பில் கலைத் திருவிழா சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள்

*அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருவண்ணாமலை : கலை பண்பாட்டு துறை சார்பில் நடந்த விழாவில், சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.கலை பண்பாட்டு துறை காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கு, கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன் ஒ.ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், சாதனைப் படைத்த கலைஞர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விருதுகள் மற்றும் பரிசு வழங்கி பேசியதாவது: கலைஞர் நூற்றாண்டுவிழாவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடி வருகிறோம். கலைஞருக்கு மட்டும் தான் கலைஞர் என்ற பட்டம் தன்னுடைய பெயருடன் நிரந்தரமாக நிலைத்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஆற்றல் உண்டு. ஆனால், கலைஞர் பன்முக ஆற்றலைக் கொண்டவர். அதனால் தான், பல்துறை கலைஞர்களும் கலைஞருக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகின்றனர். இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முத்தமிழையும் அவர் அறிந்திருந்ததால் முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்று அழைக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலைஞர்கள் அதிகமாக கொண்டதாகும் கலைகள் அனைத்துக்கும் அடிப்படையானது தெருக்கூத்து. சிறப்பு மிக்க தெருக்கூத்து பிறந்த மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்றாகும். இதற்கானது சரித்திர சான்றுகள் கல்வெட்டுகளிலும் உள்ளன. மேலும், வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள புரசை கிராமத்தில் வெளிநாட்டினரும் வந்து தெருக்கூத்து கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கலை என்பது தாய்ப்பால் போன்றது. நமது உடலிலே பிறப்பதாகும். நமது இயல்பிலேயே இருக்கும் கலையை, பயிற்சி மூலமாக மேம்படுத்திக் கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய கலை, ஓவியம். ஆகிய பிரிவுகளில் மாவட்ட அளவிள் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான கலைப் போட்டியில் பங்கேற்க உள்ளார்கள்.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களான சண்டிகர், ஜெய்பூர், மற்றும் இந்தியாவை கடந்து மலேசியாவில் புலம் பெயர் தமிழர்கள் சார்பாகவும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்விழாவில், மூத்த கலைஞர்கள் 7 பேருக்கு ₹1.40 லட்சம் மற்றும் 28 இளம் கலைஞர்களுக்கு ₹2.45 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில், கலைத்துறையில் சாதனைப்படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை முதுமணி, கலை நன்மணி, கலைச் சுடர்மணி, கலை வளர்மணி, கலை இளமணி. உள்ளிட்ட விருதுகள் வாங்கப்பட்டன.

மேலும் கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.தரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் த.ரமணன் மற்றும் கலை பண்பாட்டு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கலை பண்பாட்டு துறை சார்பில் கலைத் திருவிழா சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருதுகள் appeared first on Dinakaran.

Tags : Department of Art Culture ,Minister ,A. Etb. Velu ,Thiruvandnamalai ,
× RELATED பதவி கேட்டு எம்எல்ஏக்கள் நெருக்கடி:...