×

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 113 பயனாளிகளுக்கு ₹3.91 கோடி வங்கி கடன்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம், 113 பயனாளிகளுக்கு ₹3.91 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டமானது புத்துணர்வு பெற்று பல மேம்பாடுகள் செய்யப்பட்டு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் என பெயர் மாற்றம் செய்து செயல்பட்டு வருகிறது.

தகுதியுள்ள, விருப்பமுள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள், தனிநபர் தொழில் முனைவோர், உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் சுய தொழில் செய்ய விரும்பும் நபர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் மீது, இந்த திட்டம் சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சியில் உள்ள ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் பர்கூர் ஒன்றியம் சிகரலப்பள்ளியில் உள்ள மாஞ்சோலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை, கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து கலெக்டர் சரயு கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில், 102 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உழவர் உற்பத்தியாளர் குழு, தொழில்குழு, தொழில் முனைவோருக்கு வங்கி இணைப்பு, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் சமுதாய பண்ணை பள்ளி, இணை மானிய நிதி திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம், ஆரம்பிக்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்களை ஒருங்கிணைத்து, கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 740 பங்குதாரர்களுடன், பர்கூர் ஒன்றியத்தில் மாஞ்சோலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 735 பங்குதாரர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த இரு நிறுவனத்திற்கு, அலுவலக கட்டமைப்பு வசதிக்காக தலா ₹5 லட்சம் வீதம் ₹10 லட்சமும், தொழிலை மேம்படுத்திக் கொள்ள தலா ₹10 லட்சம் வீதம் ₹20 லட்சம் என மொத்தம் ₹30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

ஏற்றம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள மானியத்தொகையில், தக்காளி மதிப்பு கூட்டுதலுக்கான இயந்திரங்கள் மற்றும் மாஞ்சோலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள மானியத்தொகையில், நிலக்கடலை எண்ணெய் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, வணிகம் மேம்பாடு செய்வதற்காக தலா ₹10 லட்சம் வீதம், மொத்தம் ₹20 லட்சம் மானியம் இந்த குழுக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இணை மானிய திட்டத்தின் மூலம், தனிநபர் தொழில் செய்வோர் மற்றும் தொழில் துவங்க விரும்புவோருக்கு வங்கி மூலம் கடனுதவி பெற்று தரப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் ₹1 லட்சம் முதல் ₹50 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. கடனுதவிக்கு 30 சதவிகிதம் மானியம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இணை மானிய நிதி திட்டத்தின் மூலம், இதுவரை கறவை பசுக்கள் வளர்ப்பு, கையுரை தயாரிப்பு, கால்நடை தீவனம் அங்காடி, வெல்டிங் தொழில், சிறுதானிய மதிப்பு கூட்டுதல், போட்டோ ஸ்டுடியோ, இருசக்கர வாகனம் பழுது பார்த்தல் போன்ற தொழில்கள் மேற்கொள்ள 113 பயனாளிகளுக்கு ₹3 கோடியே 90 லட்சத்து 62 ஆயிரத்து 647 மதிப்பில் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ₹1 கோடியே 16 லட்சத்து 60 ஆயிரத்து 588 மதிப்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. நவீன் என்பவர் இணை மானிய நிதி திட்டத்தின் கீழ், மானியத்தொகை பெற்று உள்ளரங்கு வண்ணப்படுத்துதல் தொழிலை சிறப்பாக செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட செயல் அலுவலர் வசந்தகுமார், செயல் அலுவலர்கள் சிவக்குமார், சிவலிங்கம், இளம் வல்லுநர் பவித்ரா மற்றும் அணி தலைவர், திட்ட செயலாளர்கள் உடனிருந்தனர்.

The post வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 113 பயனாளிகளுக்கு ₹3.91 கோடி வங்கி கடன் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Dinakaran ,
× RELATED காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு