×

ராவணன் மணம் முடித்த திரு உத்தரகோசமங்கையில் நடக்கும் திருமணங்கள் அதிகரிப்பு

ராமநாதபுரம் : திருஉத்தரகோசங்கை சிவன் கோயிலில் ராவணன் மணம் முடித்ததாக கருத்தப்படும் ஒரு இடத்தில் ஆண்டிற்கு நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடந்து வருகிறது.
சிவப்பெருமானின் பூர்வீக ஊராகவும், உலகின் முதன் முதலில் தோன்றிய சிவன் கோவிலாக கருதப்படும் ஆதி சிதம்பரம் என்ற திருஉத்தரகோசமங்கையில் மங்களேசுவரி உடனுரை மங்களநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 3,100 ஆண்டுகள் பழமையான இக்கோயில் புராணம், இதிகாசங்களுடன் புராதனத்தோடு பல அற்புதங்களை கொண்டதாக உள்ளது.

ஆதிசைவர்கள் மற்றும் பாண்டிய மன்னர்களிடமிருந்து பிறகு ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இங்கு சேதுபதி மன்னர்கள் புகழ்பெற்ற ராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம் போன்ற கல் உள்பிரகார மண்டபங்களை அமைத்து பல திருப்பணிகளை செய்து இன்று வரை அவர்களது வாரிசுதாரர்கள் கட்டிக்காத்து வருகின்றனர்.

ஆன்மீகம், கலை, நுணுக்கள், பண்பாடு, வரலாற்று புராணங்கள், புராதனங்கள் மற்றும் உலக புகழ்பெற்ற ஒற்றை கல்லால் ஆன மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம், மாணிக்க வாசகரால் இயற்றப்பட்ட திருப்பொன்னூஞ்சல் பதிகம், இலங்கை அரசன் ராவனேசுவரன் மணம் முடித்த இடம், சகல பாவங்களை போக்கும் தீர்த்தங்கள், தாழம்பூ சாற்றப்படும் ஒரே சிவன் கோயில் என ஏராளமான சிறப்புகளுடன் விளங்குகிறது.

மேலும் மாணிக்கவாசகர், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், மயன், வாணாசுரன் உள்ளிட்ட ரிஷிகள் முனிவர்கள், அரிணகிரி நாதர், காரைக்கால் அம்மையார் வழிப்பட்டும், பாடல்கள், இயற்றி பாடிய தலமாகவும் விளங்குகிறது. குறிப்பாக சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் \”ஞானஉபதேசம்\” பெற்றுள்ளனர். மதுரை சொக்கநாதர்(சிவன்) பார்வதியை மீனவ பெண்ணாக சபித்து, \”திருவிளையாடல்\” அரங்கேற்றி இங்கிருந்த கடலில் வலை வீசும் படலம் நடத்தி சாபவிமோசனம் அளித்து அம்பாளை மணந்து கொண்டு மதுரைக்கு சென்றதாக \”மதுரை புராணத்தில்\” இடம்பெற்றுள்ளது.

மேலும் ராமாயணம் இசிகாசத்துடன் தொடர்புடைய கோயில் என்பதற்கு சான்றாக இலங்கை அரசராக இருந்த ராவனேசுவரனின் மனைவி மண்டோரியின் பெயர் இங்குள்ள கல்வெல்டில் இடம் பெற்றுள்ளது. தீவிர சிவபக்தையான மண்டோதரி தான் சிறந்த சிவபக்தன் ஒருவனை மணம் முடிக்க வேண்டி தவம் செய்த இடம். அவள் தவத்தின் பயனால் சிறந்த சிவப்பக்தனான ராவணனுக்கு சிவப்பெருமானே திருமணம் செய்து வைத்ததாகவும், இந்த மங்கள நிகழ்ச்சியை நடத்தி வைத்ததால் தான் சுவாமி மங்களநாதர் என பெயர் பெற்றதாகவும் தலபுராணம் கூறுகிறது.
இதனால் பல நூற்றாண்டு காலம் தொட்டு இன்று வரை இந்த கோயில் ராவணன், மண்டோதரி திருமணம் நடந்தாக கூறப்படும் மணம் மேடையில் அமர்ந்து திருமணம் முடிக்கும் வழக்கம் இன்று வரை தொடர்கிறது. ஒரு ஆண்டிற்கு 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘கோயிலில் இருக்கும் கல்வெட்டு, சான்றுகளின்படி புராணக்காலத்தோடு தொடர்புடைய மிக பழமையான இக்கோயில், மதுரை சொக்கநாதர், பார்வதியை மணந்த இடமாக கூறப்படுகிறது.

இந்த ஊரில் பிறந்ததாக கூறப்படும் தீவிர சிவபக்தையான மண்டோதரி. சிவபக்தரான இலங்கை அரசர் ராவணனை மணம் முடித்ததாக கூறப்படுகிறது. இந்த திருமணங்கள் மங்களேஸ்வரி அம்பாள் சன்னதி முன்பாக இன்று உள்ள திருமணம் மண்டபத்தில் நடந்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து இக்கோயில் பல நூற்றாண்டுகளாக திருமணங்கள் நடந்து வந்துள்ளது. சேதுபதி மன்னர்கள் காலத்திலும் இது தொடர்ந்துள்ளது. அதற்கு சாட்சியாக விலை உயர்ந்த மரத்தில் அழகிய சிற்பங்கள், கலை நுணுக்கத்துடன் கூடிய வேலை பாடுகளுடன் மணமேடை தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் மங்களநாத சுவாமிக்கும், மங்ளேஸ்வரி அம்பாளுக்கு சேதுபதி மன்னர்களின் வாரிசுகளால் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்படுகிறது. மேலும் உலகிலுள்ள சிவன் கோயில்களில் இங்கு மட்டும் தான் ஆகமவிதிகளின்படி தாழம்பூ சாற்றி வழிபாடு செய்யப்படுகிறது. இதனால் திருமணம் தடை உள்ளவர்கள் தாழம்பூ சாற்றி வழிபாடு செய்கின்றனர்.

இத்தகைய சிறப்புக்குரிய இக்கோயில் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள், உள் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மக்கள், தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைக்கின்றனர். இங்கு மணம் முடிப்பதால் தடையின்றி அனைத்து செல்வங்களுடன் வாழ்வதாக நம்பிக்கை உள்ளதால் ஆண்டில் ஆடி மாதம் தவிர்த்த மற்ற அனைத்து மாதங்களில் திருமணங்கள் நடந்து வருகிறது, வளர்பிறை முகூர்த்த நாட்களில் குறைந்தது 5க்கும் மேற்பட்ட திருமணங்கள் என ஆண்டிற்கு 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்து வருகிறது’’என்றார்.

The post ராவணன் மணம் முடித்த திரு உத்தரகோசமங்கையில் நடக்கும் திருமணங்கள் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiru Uttarakhosamangai ,Ravana ,Ramanathapuram ,Thiruuttharakosangai Shiva ,Temple ,
× RELATED பழம் பகைகொண்ட மகரக்கண்ணன்