×

குண்டும் குழியுமாக இருந்த சாலையால் விபரீதம் மொபட்டிலிருந்து தடுமாறி விழுந்த பள்ளி மாணவி லாரி மோதி பலி

*தாய் கண் முன்னே பரிதாபம் *பொதுமக்கள் போராட்டம்

சென்னை : கோவிலம்பாக்கம் அடுத்த நன்மங்கலம் ராஜாஜி நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாய் வெங்கடேஷ் (36). ஐடி நிறுவன ஊழியர். இவரது மனைவி கீர்த்தி (30). இவர்களது மகள் லியோரா  (10). மடிப்பாக்கத்தில் உள்ள பிரின்ஸ் ஸ்ரீவாரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கீர்த்தி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியிலேயே அவரது மகள் லியோரா ஸ்ரீ, 5ம் வகுப்பு படித்து வந்தார்.

வழக்கமாக தாய் கீர்த்தியுடன் மொபட்டில் லியோராஸ்ரீ பள்ளிக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை 8.45 மணிக்கு மகளுடன் கீர்த்தி பள்ளிக்கு புறப்பட்டார். கோவிலம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் மேடவாக்கம் கூட்ரோடு முதல் ஈச்சங்காடு சிக்னல் வரை சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நத்தை போல் ஊர்ந்து சென்றன.

கோவிலம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்றபோது, சாலையில் இருந்த ஒரு அடி ஆழ பள்ளத்தில் மொபட் இறங்கி ஏறியது. இதில், பின்னால் அமர்ந்து இருந்த மகள் லியோரா ஸ்ரீ நிலை தடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி, லியோராஸ்ரீ மீது ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்த கீர்த்தி, அலறி துடித்தார். ஆனால், இதை கவனிக்காத ஓட்டுநர் தொடர்ந்து லாரியை இயக்கினார். உடனே சாலையில் சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டனர். அதன்பிறகு லாரியை நிறுத்திய ஓட்டுனர், மாணவி இறந்ததை பார்த்து, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதை கண்டித்தும், இந்த சாலைகளில் தொடர்ந்து தண்ணீர் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதாகவும், முறையாக சாலை விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்றும், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மாணவி லியோராஸ்ரீ  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ‘பொதுமக்கள் இனி பள்ளி நேரங்களில் தண்ணீர் லாரிகள் செல்ல இந்த சாலையில் அனுமதிக்க கூடாது. இரவு நேரத்தில் மட்டுமே லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும். பழதடைந்த சாலையால் தான் மொபட்டில் இருந்து மாணவி தவறி விழுந்தார்.

எனவே பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.பள்ளிக்கு சென்ற மாணவி, தாய் கண்முன்பே தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கோவிலம்பாக்கம் பகுதியில் சோகதத்தை ஏற்படுத்தியது.

சிறுமியின் உடலுக்கு கலெக்டர் அஞ்சலி

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த லியோரா ஸ்ரீயின் உடலுக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘விபத்து நடைபெற்ற பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் தடுப்புகள் உள்ளதால் பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்பவர்கள், சாலையை கடப்பதற்கான வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, காவல்துறை போக்குவரத்து துறை, உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் எங்கு எல்லாம் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளதோ அங்கெல்லாம் சாலை நடுவே உள்ள தடுப்புகளை சிறிய அளவில் அகற்றி சாலையை கடப்பதற்கு வழி செய்ய உத்தரவிட்டுள்ளோம்.

குறிப்பாக இது குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் தாய்மார்களுக்கு, போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்காமல் எளிதாக செல்ல உதவியாக இருக்கும்,’’ என்றார். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பழனிவேல் உட்பட பலர் இருந்தனர்.

The post குண்டும் குழியுமாக இருந்த சாலையால் விபரீதம் மொபட்டிலிருந்து தடுமாறி விழுந்த பள்ளி மாணவி லாரி மோதி பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kovilambakkam ,Nanmangalam Rajaji Nagar 6th ,Lari Moti Bali ,
× RELATED சென்னையை அடுத்த வண்டலூர் ரயில்வே கேட்...