×

கொல்லிமலையில் பரபரப்பு சம்பவம் அருவி மேலிருந்து வீடியோ காலில் பேசிய வாலிபர் 70 அடி பள்ளத்தில் விழுந்து பலி

*தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்று உயிரைவிட்ட பரிதாபம்

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி மாசிலா அருவி, நம் அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காட்சி முனையம், அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில், மாசி பெரியசாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்று பொழுதை கழித்து வருகின்றனர்.

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதேபோல் பசுமை சுற்றுச்சூழல் திட்டத்தின் மூலம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மாசிலா அருவியும், தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வனத்துறை மூலம் ஆண், பெண் என தனித்தனியாக குளிக்க பாறையின் நடுவில் பிளவு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நடைபாதை, பொழுது போக்கு பூங்கா, உடைமாற்றும் அறை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், தற்சமயம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் வழக்கம்போல் மாசில்லா அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள், அருவியின் மேலே ஏறி, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்று குளிப்பதும், செல்பி எடுப்பதும் மற்றும் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு செல்பவர்கள் பாறைகளில் வழுக்கி கீழே விழுந்து அடிபடுவது வாடிக்கையாக உள்ளது. இப்பகுதியில் செல்பி எடுத்து தவறி விழுந்து, இதுவரை 5க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த கார்த்திகைப்பட்டி பகுதியை சேர்ந்த சபாபதி மகன் குணால்(22), என்பவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 6 பேருடன் டூவீலரில் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்துள்ளார். குணால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். நண்பர்கள் மாசிலா அருவியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், குளிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து எரசநாடிப்பட்டிக்கு சென்று மாசிலா அருவியின் மேல்பகுதிக்கு வனப்பகுதி வழியாக சென்று, குளித்துள்ளனர்.

அப்போது குணால் குளித்துக் கொண்டே வீடியோ கால் மூலமாக, தனது ஊரில் உள்ள நண்பர்களிடம் பேசியுள்ளார். பேசிக்கொண்டே திடீரென திரும்பிபோது, கால் வழுக்கி நிலை தடுமாறி 70 அடி பள்ளத்தில் குணால் விழுந்தார். விழுந்ததில் மாசிலா அருவிக்கு தண்ணீர் வரும் பாதையில் அடித்துவரப்பட்டு, அங்குள்ள செடியில் மாட்டிக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாக வாழவந்தி நாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்து செடிகளில் சிக்கிக்கொண்டிருந்த குணாலை மீட்டு, செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குணால் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாசிலா அருவியின் தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்று, அஜாக்கிரதையாக வீடியோ கால் பேசிய வாலிபர், 70 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாலிபர் மயங்கி விழுந்து சாவு

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கல்யாணம். இவரது மகன்கள் நவீன்காந்த்(23), நிதிஷ்காந்த்(21). இருவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு, வேலை தேடி வருகின்றனர். இந்நிலையில், இருவரும் நேற்று மதியம், டூவீலரில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றனர்.

அப்ேபாது, நிதிஷ்காந்துக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நவீன்காந்த், இதுகுறித்து வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மயங்கி கிடந்த நிதிஷ்காந்தை மீட்டு செம்மேடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கொல்லிமலையில் பரபரப்பு சம்பவம் அருவி மேலிருந்து வீடியோ காலில் பேசிய வாலிபர் 70 அடி பள்ளத்தில் விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Kolimalayan ,Fallout ,Padhapam Chendamangalam ,Namakkal ,Kolimala ,Stir ,Kolimalayas ,Dinakaran ,
× RELATED மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த...