×

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஃபுகுஷிமா அணு உலையின் அணு கழிவுகள் நிறைந்த நீரை நாளை மறுநாள் கடலில் வெளியேற்றவுள்ளதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு

டோக்கியோ: பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் அணு கழிவுகள் நிறைந்த நீரை நாளை மறுநாள் (24-08-2023) கடலில் வெளியேற்றவுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அணு உலைகளை குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அங்குள்ள 6 அணு உலைகளில் 3 அணு உலைகள் உருகின. சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. இந்த விபத்து நிகழ்ந்து 12 ஆண்டுகள் கடந்தும், அந்த உலையில் இன்னும் கதிர்வீச்சின் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே புகுஷிமா அணு உலையில் உள்ள அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அந்த அணு உலையை முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணிகளில் டெப்கோ என்ற நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகள் நிறைந்த சுமார் 10 லட்சம் மெட்ரிக் டன் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு ஆலையின் அருகில் உள்ள மிகப்பெரிய தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.

அணு கழிவுகள் அகற்றப்பட்ட இந்த கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்தை ஜப்பான் அரசு நீண்டகாலமாக பரிசீலித்து வருகிறது. ஆனால் இந்த திட்டத்துக்கு மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலகட்ட ஆய்வுக்கு பிறகு அணு கழிவுகள் அகற்றப்பட்ட கழிவு நீரை கடலில் திறந்துவிடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து கழிவு நீரை ஆலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள பசிபிக் பெருங்கடலில் கடலுக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை மூலம் வெளியேற்றுவதற்கான பணிகளை ஜப்பான் அரசு தொடங்கியது. இந்நிலையில், அணு கழிவுகள் நீக்கப்பட்ட கழிவு நீரை வரும் 24-ம் தேதி முதல் படிப்படியாக வெளியேற்ற உள்ளதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

The post பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஃபுகுஷிமா அணு உலையின் அணு கழிவுகள் நிறைந்த நீரை நாளை மறுநாள் கடலில் வெளியேற்றவுள்ளதாக ஜப்பான் பிரதமர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Prime Minister of Japan ,Fukushima Nuclear Furnace ,Tokyo ,Fukushima nuclear power plant ,Dinakaran ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்