×

கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் இல்லாததால் கருகும் வாழைகளால் விவசாயிகள் வேதனை

ஸ்பிக்நகர் : கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் இல்லாததால் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்து உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சார்ந்த தொழில்களும், விவசாயம் சார்ந்த தொழில்களும் பிரதானமாக விளங்கி வருகிறது. விவசாயத்தில் நெல், வாழை, உளுந்து உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக குறிப்பிட்ட காலங்களில் மழையின்றி விவசாயத்தில் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.

இதனால் சொந்த நிலங்கள் வைத்திருந்த பலரும், தங்களின் பணத்தேவைக்காக கட்டுகுத்தகைக்கும், ஒத்திக்கும் கொடுத்துள்ளனர். கடந்த வடகிழக்கு பருவமழை கைகொடுக்காத நிலையில், இந்தாண்டு தென்மேற்கு பருவமழையும் ஏமாற்றி வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையே நிலவி வருகிறது. கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் இல்லாததால் இந்த குளத்திற்குட்பட்ட பாசன பகுதிகளான கோரம்பள்ளம், வீரநாயக்கன்தட்டு, காலாங்கரை, அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, குலையன்கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. பயிரிடப்பட்டுள்ள வாழைகளும் தண்ணீரின்றி கருகி வருகின்றன.

இந்த பகுதிகளில் உள்ள ஒரு சிலர் சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றி விவசாயம் செய்கின்றனர். மீதமுள்ளவர்கள் எப்போது தண்ணீர் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் பச்சைப்பசேலென காட்சியளித்த நிலங்கள், தற்போது காய்ந்து கிடக்கின்றன. இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு கோரம்பள்ளம் குளத்தை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பயிர் செய்யப்பட்டுள்ள வாழைகளை காப்பாற்ற கோரம்பள்ளம் குளத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

The post கோரம்பள்ளம் குளத்தில் தண்ணீர் இல்லாததால் கருகும் வாழைகளால் விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Korampallam ,Spignagar ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் ஹேர்டை குடித்து ஆசிரியை தற்கொலை