×

அதிமுக மாநாட்டில் குவியல் குவியலாக டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவில் மண்ணை அள்ளிப் போட்ட அதிமுகவினர்..!!

மதுரை: அதிமுக மாநாட்டில் குவியல் குவியலாக டன் கணக்கில் கீழே கொட்டப்பட்ட உணவில் அதிமுகவினர் மண்ணை அள்ளிப்போட்டு மூடியுள்ளனர். மதுரை வளையங்குளத்தில் கடந்த 20ம் தேதி நடைபெற்ற அதிமுக மாநாட்டிற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு 300 கவுண்டர்கள் அமைக்கப்பட்டு 3 வேலையும் உணவு வழங்கப்பட்டது. மாநாடு நடைபெற்று கொண்டிருக்கும் போதே பல கவுண்டர்களில் வழங்கப்பட்ட உணவில் தரமில்லை என்றும் சரியாக வேகவில்லை என்றும் புகார் கூறிய தொண்டர்கள், உணவை கீழே கொட்டிச் சென்றனர்.

மாநாட்டு பந்தலிலேயே சுமார் 1 டன் அளவுக்கு புளியோதரை மற்றும் சாம்பார் சாதம் கொட்டப்பட்டு வீணடிக்கப்பட்ட நிலையில், குவியல், குவியலாக டன் கணக்கில் காட்சியளித்த உணவு குறித்த வீடியோ ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் மாநாட்டு திடல் அருகே ஜேசிபி இயந்திரம் உதவியுடன் தோண்டப்பட்ட குழியில் நேற்று இரவே வீணான உணவை கொட்டிய அதிமுகவினர், அதன் மீது மண்ணை அள்ளி குவித்தனர்.

மதுரை விமான நிலையம் அருகேயும், உணவை குவித்து வைத்திருப்பதால் அவற்றை உண்ண ஏராளமான பறவைகள் வரும் பட்சத்தில் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வீணான உணவை முறையாக அப்புறப்படுத்தாமல் மண்ணை அள்ளி கொட்டி சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அதிமுக மாநாட்டில் குவியல் குவியலாக டன் கணக்கில் கொட்டப்பட்ட உணவில் மண்ணை அள்ளிப் போட்ட அதிமுகவினர்..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,
× RELATED உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை