×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு..!!

பெங்களூரு: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர் வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதேபோல காவிரியின் முக்கிய துணை நதியான கபிலா உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதியிலும் கனமழை பெய்தது. இதனால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனிடையே கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து 17,776 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 13,341 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,841 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றம் 2,500 கனஅடியாக உள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் உபரிநீர் திறப்பு நேற்று 17,631 கனஅடியாக இருந்த நிலையில் குறைக்கப்பட்டிருக்கிறது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka dams ,Kavieri ,Tamil Nadu ,Bengaluru ,Kaviri ,Karnataka ,Kunagu ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...