×

உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

சென்னை: உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டில் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியுடன், தமிழ்நாடு இளம் வீரர் பிரக்ஞானந்தா மோதி வெற்றி பெற்றார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அரை இறுதிக்கு முன்னேறிய இரண்டாம் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.

இதையடுத்து பிரக்ஞானந்தா அரையிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள ஃபேபியானோ கருனாவுடன் மோதினார். இருவரும் விளையாடிய இரண்டு போட்டியும் டிராவில் முடிந்தது. இதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பரபரப்பான டை பிரேக்கர் ஆட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதனால் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். “உங்களுடைய அபாரமான செயல்திறனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், இறுதிப்போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் “இளம் செஸ் ஸ்டார் பிரக்ஞானந்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள், #FIDEWorldCup2023 இறுதிப் போட்டிக்கு செல்வதை நினைத்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெருமிதம் கொள்கிறது, வெற்றியைப் பதிவுசெய்ய வாழ்த்துகிறோம்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி வாழ்த்து! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Udayanidhi ,Pragnananda ,World Cup Chess Series ,Chennai ,Grandmaster ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...